முள்றியின் டைரி : 89 – மாரா ஒரு மந்திரலோகம் : 19

அன்று கடைசி நாள். மறு நாள் கிளம்ப வேண்டும்.

இந்த முறை செம ட் ரிப்பாகி விட்டது. ஏராளமான சில்யூட்ஸ், நிறைய சேஸிங் & ஹண்ட்டிங்ஸ் என்று திருப்திகரமான ட்ரிப். 

இன்று ரொம்ப ரிலாக்ஸ்டாகச் சுற்றலாம் என்றேன் ஜாக்கிடம்.

பிரேக்ஃபாஸ்ட்டிற்கு மாரா ரிவர் செல்லலாம் என்றேன். போகும் வழியில் ஆங்காங்கே நின்று இயற்கையை ரசித்துக் கொண்டும், ஓரிரண்டு படங்கள் எடுத்துக் கொண்டும் சாவகாசமாக மாரா ஆற்றிற்குச் சென்றோம். 

இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது மசை மாரா சென்று வாருங்கள். அப்படிச் செல்கையில் ஒரு காலைப் பொழுதையாவது மாரா ஆற்றங்கரையில் செலவழிக்கவும். நாங்கள் அங்கிருந்த போது,ஆற்றின் வறண்ட ஒரு பகுதியில் ஆண் சிங்கம் ஒன்று ஆற்றைக் கடக்க முயற்சித்தது. அப்போது நீர் யானை ஒன்று அதை நோக்கி வர சிங்கம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடியது. காலை நேர கோல்டன் லைட்டிங்கில் அந்தச் சிங்கத்தை சில படங்கள் எடுத்தேன்.

நிறைய நீர் யானைகள் இருக்கும் ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு, காலைச் சிற்றுண்டியை முடித்தோம்.

அந்த நீர் யானைகளைப் பார்த்துக் கொண்டே காலை உணவு உண்டதை, அழகு, அற்புதம், சொர்க்கம் என்று என்ன சொன்னாலும் அந்த அனுபவத்தை முழுமையாக வர்ணித்ததாகாது. 

அந்த இடத்தை விட்டு நகரவே மனசில்லை.

சரி…ஸ்லோவாக ஒரு டிரைவ் செல்வோம் என்றேன். கிளம்பி சிறிது தூரத்தில் அந்த ஒட்டகச் சிவிங்கியையும் அதன் குட்டியையும் பார்த்தோம். பிறந்து நாலைந்து நாட்கள்தான் ஆகியிருக்கும்.

அந்தக் குட்டி அழகென்றால் அழகு அப்ப்படி ஒரு அழகு. 

நாம் கைக் குழந்தைகளை வெளியில் தூக்கிச் சென்றால், எப்படி எல்லாவற்றையும் ஆச்சரியமாகவும் , அதிசயமாகவும் பார்க்குமோ, அதேபோல்தான் அந்த ஒட்டகச் சிவிங்கிக் குட்டியும் – அதையும் அதன் தாயையும் தாண்டி செல்லும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தது. 

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வரிக்குதிரைகள் தங்களுக்குள் எழுந்த ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக ஒன்றை ஒன்று துரத்த ஆரம்பிக்க, அந்த ஒட்டகச் சிவிங்கிக் குட்டி சட்டென்று பயந்து போய் தன் தாயுடன்  ஒட்டிக் கொண்டது, அழகான ஒரு புதுக் கவிதை.

பொதுவாக மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டகச் சிவிங்கி தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பதில் கொஞ்சம் வீக்தான். ஆனால், இந்தத் தாய் கொஞ்சம் விதிவிலக்கு போல. ரொம்பவும் கரிசனமாக தன் குட்டியை கவனித்துக் கொண்டது.

இரண்டு மணி நேரம் அந்தக் குடும்பத்துடன் செலவிட்டோம். அந்தத் தாய், தன்னுடைய குட்டியை (வன) உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் விதமாக மெதுவாக நடந்து கொண்டே அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு சிறு விலங்குகளையும் கடந்து சென்றது ஹைக்கூ. நல்ல வேளை சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப் புலி ஒன்றும் அந்தப் பக்கம் வரவில்லை. 

அவை ஒரு பெரிய புதருக்குள் நுழைந்ததும் நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். 

அன்று மாலை, விடுதியை விட்டுக் கிளம்பி கொஞ்சம் தூரத்திலேயே டோப்பி குடும்பத்தில் ஒரு பெண் சிங்கம் “டோப்பி” என்னும் மான் ஒன்றை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதனுடன் இருந்த இரண்டு குட்டிகளும் அந்த இறைச்சியை கடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அவற்றிற்கு இறைச்சி செரிமானம் ஆகாது என்பது தெரிந்ததாலோ என்னவோ அந்தத் தாய் , அந்தக் குட்டிகளை தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டே தான் மட்டும் உண்டு கொண்டிருந்தது.

யார் இதெல்லாம் இவற்றிற்கு சொல்லிக் கொடுப்பது ? இது எப்படி பகுத்தறிவோடு சேர்த்தி இல்லாமல் போனது ? ஆச்சரியம்.

அந்தத் தாய் மட்டும் அருகில் இருந்த நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்தியதை லோ ஷாட்டில் எடுக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

வனத்திற்கு அடிக்கடி செல்பவர்கள், விலங்குகள் தங்கள் குட்டிகளுக்குக் கொடுக்கும் ட்ரெய்னிங்கை அவதானிக்காமல் இருக்க முடியாது. 

இறைச்சியை உண்ணத் துடிக்கும் குட்டிகளைத் தடுப்பது, வேட்டையாடுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் முறை, குழிகளுக்குள் மாட்டிக் கொள்ளும் குட்டிகளைக் காப்பாற்றுவது, குட்டிகளைச் சூழ்ந்து கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்றும் விதம், தங்கள் குட்டிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விதம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு முறை ஒரு யானைக் குட்டி தங்களது சாணத்தையே உண்ணத் தொடங்க, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதன் தாய், தன் துதிக்கையை வைத்து அதன் குட்டியின் வாயிலிருந்து அந்தச் சாணத்தை பிடுங்கி வெளியில் துப்பி விட்டு, அந்தக் குட்டியை வலுக் கட்டாயமாக அந்த இடத்திலிருந்து தள்ளிக் கொண்டு சென்ற நிகழ்ச்சியை என்னால் மறக்கவே இயலாது. 

இத்துடன் என்னுடைய மாரா ஒரு மந்திரலோகத்தை முடித்துக் கொள்கிறேன்.

விரைவில், கடந்த 28 வருடங்களில்  என்னுடைய அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தக வடிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

வெ.பாலமுரளி

பி.கு: அங்கிருந்து மறு நாள் கிளம்பும் வழியில் சிங்கங்களின் ஒரு காதல் சம்பவத்தையும், இரண்டு ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் யார் பெரியவன் என்ற போட்டியில் ஈடுபட்டு ஒருவர் கழுத்தை வளைத்து மற்றவர் கழுத்தைச் சுற்றும் “நெக்கிங்” எனப்படும் ஒரு நிகழ்ச்சியையும் படம் எடுத்து விட்டு கிளம்பியது கூடுதல் போனஸ்