முள்றியின் டைரி : 88 – மாரா ஒரு மந்திரலோகம் :18

அது ஒரு மழை நாள்.

காலையிலிருந்தே மழை நச நசவென்று பெய்து கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. 

காலை சஃபாரியில் பெரிதாக ஒன்றும் தேற்ற  முடியவில்லை. விடுதிக்கு வந்து, விடுதியின் லாபியில் உட்கார்ந்துகொண்டு, “ஒலாரே ஒரோக்” என்னும் அந்த ஆற்றில் விழும் மழைத்துளியை கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்து விட்டு மதிய உணவையும் முடித்து விட்டு வழக்கம்போல் ஒரு தூக்கம் போட்டேன்.  

மூன்று மணிக்கு எழுந்து பார்த்தால், மழை விட்ட பாடில்லை. ஒரு காப்பியை மட்டும் குடித்து விட்டு, “ மழை விடாமல் பெய்கிறதே, என்ன செய்யலாம் ஜாக் ?” என்றேன்.

“உனக்கு சிங்கம் தலையை சிலுப்புகிறாற்போல் ஒரு சீன் காண்பிக்கிறேன், வா” என்றான். அவன் அடித்து சொல்லுகிற தோரணையை வைத்து, சிங்கத்துக்கு அவன் வாட்சப் செய்தியை அல்ரெடி அனுப்பி விட்டான் போலிருக்கு என்று நினைத்து உற்சாகமாகக் கிளம்பினேன்.

காட்டுக்குள் போய் விட்டால், மணிரத்தினம் படத்தில் வரும் வசனங்கள் போல்தான் பேசிக் கொள்வோம்.

“எந்த ஃபேமிலி ?” என்றேன்

“சைலஸ் பாய்ஸ்” என்றான்.

“எத்தனை ?” என்றேன்

“மூணு” என்றான்.

“ஃபேமிலியில் லேடிஸ் யாரும் இல்லையா ?” என்றேன்.

“ இல்லை. மூணு பாய்ஸ் மட்டும்தான்” என்றான்.

“இனப்பெருக்கத்துக்கு ? “ என்றேன்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றான்.

புரிஞ்சுடுத்து. 

மிகச் சரியாக 15 நிமிடங்களில் அந்த பாய்ஸ் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டோம். 

அவர்கள் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு முறையான ட்ராக்கும் இருந்ததைப் பார்த்ததும் நான் துள்ளிக் குதித்தேன். ஆனால் ஜாக் மட்டும் ஒன்றும் பேசவில்லை (காரணம் பின்னால்தான் புரிந்தது).

அந்த மூன்று சகோதரர்களின் முகத்திற்கு நேர் எதிரே வண்டியை நிறுத்தி, “சீக்கிரம் எடு” என்றான். அதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.

நான் என்னுடைய 1DX Mark II  ஐயும் 500 மிமீ லென்ஸையும் மட்டும் ஜன்னலில் வைத்து பட படவென்று எடுக்கத் தொடங்கினேன். 

சகோதர்களில் ஒருவன், முகத்தை வானத்தை நோக்கி காண்பித்து மழையை ரசித்தது கவிதை போல் இருந்தது. நானும் அதை ரசித்துக் கொண்டே சில படங்கள் எடுத்தேன். சகோதர்கள் மாறி மாறி தலையை சிலுப்புவதும், ஒருவனோடு ஒருவனோ உரசிக் கொண்டு என்னை நோக்கி நடந்து வருவதும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அடித்துப் பொலித்து விட்டேன்.

மழையும் விடாமல் பெய்ததால், என்னுடைய கேமரா (1DX Mark II ) நன்றாகவே நனைந்து விட்டது. நான் அதை கண்டு கொள்ளவேயில்லை – அன்று இரவு வரப் போகும் பிரச்சினை தெரியாமலேயே. 

அப்போதுதான் ஜாக் “ ஓ…நரகல்” என்றான் ( ஆதாங்க “ஓ ஷிட்”). 

“என்னாச்சு?” என்றேன். “பின்னால் திரும்பிப் பார்” என்றான்.

பார்க்கின் சீனியர் ஆஃபிஸர் “பார்க் வார்டன்” அங்கு வந்து, அந்த இடத்திலிருந்த அனைத்து கார்களின் நம்பர் பிளேட்களையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். 

எனக்குப் புரியவில்லை. “அதுதான் ட்ராக் இருக்கிறதே. அப்புறம் என்ன பிரச்சினை ?” என்றேன். “ ட்ராக் இருந்தாலும், இது தடை செய்யப்பட்ட பகுதி” என்றான். “உனக்கு முன்பே தெரியுமா ? “ என்றேன். அவன் அமைதியாக “ தெரியும்” என்றான். எனக்கு நிஜமாகவே செம கோபம் வந்து விட்டது. 

காரணம் நான் காட்டிற்குள் ரொம்பவே எத்திக்ஸ் பார்க்கும் கோஷ்டி. படம் வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. வந்த கோபத்திற்கு காச் மூச்சென்று கத்தித் தீர்த்து விட்டேன்.

“வார்டனே தேவலை” என்று அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். திருப்ப திரும்ப சாரி என்றான். எனக்கு பயங்கர மூடு அப்செட். “எடுத்துக் கிழித்தது போதும். வா திரும்பிச் செல்வோம்” என்றேன்.

“கோபித்துக் கொள்ளாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். 

“ சரி..என்ன பனிஷ்மெண்ட் ?” என்றேன். அவன் சொன்ன பதிலில் நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

50,000 ஷில்லிங்கும் ( இந்திய மதிப்பில் 35,000 ரூபாய்), 3 வருடத்திற்கு மசை மாராவில் நுழைய தடையுமாம்.

எனக்கு அவன் மீது இருந்த கோபம் சுத்தமாய்ப்  போய் விட்டது. பரிதாபமாய் இருந்தது. பாவம், அவன் அதைச் சொல்லுகையில் முகத்தில் ஈயாடவில்லை. முகமே தொங்கி விட்டது.

சரி ஜாக் திரும்புவோம் என்றேன். பரவாயில்லை பாலா. இப்போதுதான் நீர் யானைகள் வாயை அகலத் திறந்து கொட்டாவி விடும். மழையோடு சேர்த்து அதை எடுத்தால் படம் மிகவும் அருமையாக வரும் என்றான். தொழில் மீது அவனுக்கு இருந்த பக்தியைப் பார்த்து  நிஜமாகவே மெய் சிலிர்த்து விட்டேன். “இல்லை ஜாக். விடுதி திரும்புவோம்” என்றேன் கவலை தோய்ந்த தொணியில்.  No Bala. It is part of the game. Let us continue” என்றான்.

ஆப்பிரிக்கர்கள் இப்படித்தான். தலையில் இடியே விழுந்தாலும் தட்டி விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களுடன் நான் 25 வருடங்கள் குப்பை கொட்டியிருந்தாலும், அவர்களிடமிருந்து இந்த ஒரு நல்ல குணத்தை மட்டும் என்னால் கற்றுக் கொள்ளவே முடியவில்லை (என்னவோ மத்த எல்லா நல்ல குணத்தையும் கத்துக்கிட்ட மாதிரி….இவன் பேசும் பேச்சை கேக்க முடியல ராசா ). அதெல்லாம் அப்படியே வரணும்…..

அவன் சொன்னாற்போல், ஒலாரே ஒரோக் ஆற்றின் ஒரு பகுதியில் ஒரு நீர் யானை “ வாயில் என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்ட யசோதையிடம், கிருஷ்ணன் வாயை அகலத் திறந்து அண்டத்தையே காண்பித்தான்” என்று ஒரு கதை சொல்வார்களே, அதைப் போல் அவ்வளவு பிரமாண்டமான வாய் …அவ்வளவு பிரமாண்டமான கொட்டாவி. மழைத்துளிகளோடு அந்த ஆற்றையும், அந்த கொட்டாவியையும் எடுத்து விட்டு சோகத்துடன் கிளம்பினோம். 

அன்று இரவு டின்னரின் போது ஜாக்கை சந்திக்கும்போது, அவனுக்குத் தெரிந்த நண்பர்களை வைத்து 50,000 ஷில்லிங் ஃபைன் மட்டும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து விட்டதாகக் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. அதில் என் பங்காக 25,000ஷில்லிங்கை நான் கொடுத்தேன் ( டிப்ஸ் போக). அவன் என்னை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டான். 

அவனை சந்தோஷப்படுத்திய சந்தோஷத்துடன் ரூமுக்குச் சென்றால் இன்னொரு அதிர்ச்சி எனக்குக் காத்துக் கொண்டிருந்தது. 

என்னுடைய 1DX Mark II க்குள் தண்ணீர் இறங்கி சுத்தமாக வேலை செய்ய மறுத்து விட்டது. 

எனக்கு தலை நிஜமாகவே கிறு கிறுவென்று சுற்றி விட்டது. இந்தியா வந்து அதை ரிப்பேர் செய்து விடலாம் என்றாலும் கூட, மாராவில் இருக்கும் மிச்ச சொச்ச  நாட்களில் 5D Mark III யை மட்டும் வைத்துக் கொண்டு 500 மிமீ, 100- 400 மிமீ, 24-105 மிமீ மற்றும் 16-35 மிமீ என்று நான்கு லென்ஸ்களை எப்படி உபயோகப்படுத்தப் போகிறோம் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து விட்டது. 

Today was not my day என்று என்னை நானே நொந்து கொண்டு உறங்கச் சென்றேன்.

வெ.பாலமுரளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *