முள்றியின் டைரி : 87 – மாரா ஒரு மந்திரலோகம் : 17

வேட்டையாடு விளையாடு : 4

அதே ஐந்தாம் நாள்.

மதியம் வெயிட்டாக நமது தொழிலை (தக்காளி பச்சடி, உருளைக் கிழங்கும் கேரட்டும் சேர்த்து ஒரு வறுவல், முட்டை ஆம்லெட், கெட்டித் தயிர் மற்றும் நம் தமிழகத்து சாரி, நம்  தமிழ்நாட்டு ஊறுகாய், சோறு என்று செமையாக ஒரு கவனிப்பு)  கவனித்து விட்டு, அந்த உண்ட மயக்கத்தில் செமத்தியாக ஒரு உறக்கம். 

தூக்கத்தில் யாரோ என்னை “ பாலா, பாலா” என்று கூப்பிட்டார்கள். ரம்பையோ, ஊர்வசியோவாகத்தான் இருக்க வேண்டும் என்பதால் அந்த அழைப்பை கண்டு கொள்ளாமல் தூக்கத்தைத் தொடர்ந்தேன் (ம்க்கும்…ஏதாவது நம்புற மாதிரி சொல்றானா பாரு… ). 

திரும்பவும் அதே குரல். 

சட்டென்று முழிப்பு வந்து எழுந்து பார்த்த போதுதான் புரிந்தது டெண்டுக்கு வெளியில் நின்று ஜாக்தான் என்னை அழைத்துக் கொண்டிருந்தான். 

காலையில் பார்த்த சிறுத்தையின் ஹண்ட்டிங்கே இன்னும் மறக்கவில்லை. அதற்குள் டோப்பி ப்ரைட் ஒரு காட்டெருமை கும்பலை குறி வைத்து காத்திருக்கும் செய்தி கிடைத்தது. 

வாரிச் சுருட்டி எழுந்து முகத்தை கழுவிக் கொண்டு ஒரு காப்பியை மடக் மடக்கென்று ஊற்றி விட்டு ஓடினேன்.

அந்த இடத்தைச் சென்றடையும்போது மணி மாலை நான்கு. 

நண்டு, சிண்டையெல்லாம் சேர்த்து டோப்பி ப்ரைட் என்னும் சிங்கக் குடும்பத்தில் மொத்தம் 28 உறுப்பினர்கள். 

நாங்கள் பார்த்தபோது மொத்தம் 18 சிங்கங்கள் ஒரு மிகப் பெரிய காட்டெருமைக் கூட்டத்தை குறி வைத்து காத்திருந்தன. 

அந்த 18 இல் நாலைந்து மூத்த பெண் சிங்கங்களைத் தவிர மற்றவை அனைத்தும் இளந்தாரிகள். அதில் நாலு இளைஞர்கள் (ஆம்பளப் பசங்க) மட்டும் தங்கள் வீரத்தைக் காட்ட இதுவே தருணம் என்று தங்கள் தாய்மார்களை விட்டுப் பிரிந்து மிகவும் மெதுவாக அந்த காட்டெருமைக் கூட்டத்தை நெருங்க ஆரம்பித்தன.

அந்தக் காட்டெருமைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 50 எருமைகள் இருந்தன. எல்லாமே மெகா சைஸ்.

இளங்கன்று பயம் அறியாது என்பது போல, அந்த சிங்கங்கள் நான்கிற்கும் சீரியஸ்னெஸ் புரியவில்லை.

“புஷ்பான்னா ஃப்ளவர்னு நெனச்சியா, ஃபயர்டா “ என்பது போல அந்த காட்டெருமைகள், “ எருமைன்னா , மனுஷங்க பால் கறந்து குடிப்பாய்ங்கெளே அந்த வீட்டு எருமைன்னு நினைச்சீங்களா ? நாங்க காட்ட்ட்டெருமைடா “ என்று பயப்படாமல் அந்த சிங்கங்களை நோக்கியே நடந்து வந்தன. 

இவை அனைத்தும் நாங்கள் இருந்த ட்ராக்கிற்கு வெகு தூரத்தில் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய 500 மிமீ லென்ஸால் கூட ஓரளவிற்குத்தான் கவர் பண்ண முடிந்தது. 

எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் கூட ஊகிக்க முடியவில்லை. காரணம், அந்த நாலு இளம் சிங்கங்கள் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தனவே தவிர, அந்த மூத்த சிங்கங்கங்களில் ஒன்று கூட அசைந்து கொடுக்கவில்லை.

ஆனால், தங்கள் பார்வையை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று எங்கும் அலைய விடாமல், நடப்பவற்றை மிக மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன.   

அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி அந்த இரண்டு குழுக்களும் நேருக்கு நேராக நெருங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த சமன்பாடு சமமாக இல்லை. ஒரு பக்கம் நாலே நாலு சிங்கங்கள். மறு புறம் கிட்டத்தட்ட 50 காட்டெருமைகள். அவை மட்டும் கொஞ்சம் ப்ளான் பண்ணி வளைத்தால் அந்த நாலு சிங்கங்களும் சட்னிதான். 

எனக்கு ஹார்ட் பீட் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. நேரம் வேறு 5.30 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

சட்டு புட்டுனு தொரத்துங்கப்பா, தட தடவென்று கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துக்கறேன். லைட்டிங் வேறு போய்க் கொண்டேயிருக்கிறது என்றா சொல்ல முடியும். வேறு வழியின்றி. காத்துக் கொண்டிருந்தேன். 

ஒரு நேரத்தில் சிங்கங்கள் நான்கும் அவற்றை துரத்த ஆரம்பித்தன. ஆனால் கொஞ்சம் தூரம்தான். காட்டெருமைகள் ஒரு புள்ளியில் நின்று சிங்கங்களை திரும்பி துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவு நேரம் சும்மா அவதானித்துக் கொண்டிருந்த மூத்த பெண் சிங்கங்கள், தங்கள் பசங்களுக்கு ஏதோ ஆபத்து என்று தெரிந்தவுடன் டமாலென்று எழுந்து ஒரு போருக்குத் தயாராகின. 

ஆனால், நிலைமை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. அந்தப் பசங்க திரும்பி காட்டெருமைகளைத் துரத்தத் தொடங்கின. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த விளையாட்டு தொடர்ந்தது.

மாறி மாறி துரத்துவதும், ஓடுவதுமாக இருந்தது. ஆனால், கடைசி வரை மூத்த சிங்கங்கள் மட்டும் களத்தில் இறங்கவேயில்லை.

ஒரு அமர்க்களமான ட்ரெயினிங் செஷனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

நான் அந்த மொத்த ட்ரெய்னிங்கையும் வீடியோவிலும், புகைப்படத்திலும் கவர் செய்து கொண்டிருந்தேன். லைட்டிங் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த மொமெண்ட்தான் முக்கியம் என்பதால் சிறிதும் கவலைப் படாமல் அந்த விளையாட்டு முழுவதையும் அணு அணுவாக ரசித்துக் கொண்டே முழுவதையும் கவர் செய்தேன்.

ஒரு கட்டத்தில், காட்டெருமைகள் கொஞ்சம் கூட பின் வாங்காமல் துரத்திக் கொண்டே இருக்க, சிங்கங்கள் “ Today is not our day . Let us give up” என்று தலை தெறிக்க ஓடி விட்டன. 

எல்லோருக்கும் “வடை போச்சே” ஃபீலிங்குதான்.

லைட்டிங்கும் மொத்தமாகப் போய் விட்டது. அன்று மேக மூட்டமான நாள் என்பதால் சன் செட்டும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஆனால், நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காமல், வானத்தில் ஆங்காங்கே சில வர்ண ஜாலங்கள் நடக்க ஆரம்பித்து. ச்சே..இந்த சிங்கங்களின் சில்யூட் கிடைத்தால் எப்படி இருக்கும் என்றேன் ஜாக்கிடம். அவனும் கொஞ்சமும் யோசிக்காமல், “முயற்சிப்போம்” என்றான்.

அவை இருக்கும் திசைக்கு எதிர்புறத்தில் ஒரு பள்ளத்தில் போய் காரை நிப்பாட்ட, இரண்டு சிங்கங்கள் அட்டகாசமாய் சில்யூட்டிற்கு போஸ் கொடுத்தன. நான் பத்து அல்லது பதினைந்து ஃபோட்டோக்கள்தான் எடுத்திருப்பேன்.

“ பாலா பாலா ஹோல்ட் டைட்” என்று கத்தி விட்டு வண்டியை ஜெட் ஸ்பீடில் விரட்டினான். எனக்கு சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. என்னடா இவ்வளவு அட்டகாசமான ஒரு சந்தர்ப்பத்தை இவன் கெடுக்கிறானே என்று ஒரு நிமிடம் கோபமாய் கூட வந்தது. ஆனால் ஜாக் மீது உள்ள நம்பிக்கையால் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். ஒரு இரண்டே நிமிடத்தில் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. 

அங்கிருந்த ஒரு காய்ந்த மரத்தின் கீழ் டோப்பி குடும்பத்தின் ஏழெட்டு சிங்கங்கள் வரிசையாய் நின்று ஒன்றன் பின் ஒன்றாக மரத்தின் மீது ஏறி சில வினாடிகள் போஸ் கொடுத்து விட்டு இறங்குவதும், உடனே மற்றொரு சிங்கம் மரத்தின் மீது ஏறுவதுமாக ஒரு மேஜிக் ஷோவே நடந்து கொண்டிருந்தது.

பேக்ரவுண்டில் வானத்தின் வர்ணங்கள் வேறு நீலம், ஆரஞ்ச் , சிவப்பு என்று மாறிக் கொண்டேயிருந்தது.

நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரே ஒயிட் பேலன்ஸை வைத்து அனைத்து வர்ணங்களிலும் அடித்துத் தள்ளி விட்டேன். 

மாரா இப்படித்தான். ஏமாற்றவே ஏமாற்றாது. 

நான் எடுத்த படங்களை மகிழ்ச்சியோடு என் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு அனுப்பி வைக்க, என்னை நன்றாக தெரிந்த அவர்களே நான் ஏதோ ஃபோட்டோஷாப்பில் விளையாடி இருப்பதாக மெசேஜ் அனுப்பியது வருத்தமாக இருந்தது. இருந்தாலும் அது மாராவிற்கு கிடைத்த வெற்றி என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

மாரா…ஜெயிச்சுட்ட மாரா.

வெ.பாலமுரளி