முள்றியின் டைரி : 86 – மாரா ஒரு மந்திரலோகம் : 16

வேட்டையாடு விளையாடு : 3

ஐந்தாம் நாள்.

எப்போதும் போல், காலை 4.30 மணிக்கே எழுந்து ரெடியாகி 5.30 மணிக்கு ஹோட்டலின் ரிசப்ஷனுக்கு வந்தால் ஜாக் மிகவும் பரபரப்பாக எனக்காகக் காத்துக் கொண்டிருந்தான். கேட்டதற்கு, சீக்கிரம் காப்பியை குடித்து விட்டு கிளம்பு என்றான்.

ஏதோ சூப்பர் டூப்பர் சீன் காண்பிக்கப் போகிறான் என்பது உறுதியாகி விட்டது. 

அரக்க பரக்க அந்த காப்பியைக் குடித்து முடித்து விட்டு கிளம்பினோம்.

இப்போ சொல்லு ராசா, என்ன அந்த நற்செய்தி என்றேன். 

லுலூக்கா வேட்டையாடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றான். அவன் வண்டியை செலுத்திய வேகத்தில், நேரத்தின் முக்கியத்துவம் புரிந்து, அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்யாமல், என்னுடைய இரண்டு கேமராக்களையும் தயார் செய்து, குறைவான வெளிச்சத்துக்கேற்ப ISO வை மாற்றி மற்ற செட்டிங்ஸையும் மாற்றி விட்டு, அந்த அதிகாலை குளிர் காற்றையும், அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த சிறு விலங்குகளையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஆங்….லுலூக்காவைப் பற்றி சொல்லவில்லையே.

லுலூக்கா ஒரு பாவப்பட்ட பெண் சிறுத்தை. ஒவ்வொரு வருடமும் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈன்று அவற்றை சிங்கங்களிடமோ, கழுதைப் புலிகளிடமோ பறி கொடுத்து விடும்.

2019 – இல் சென்றபோது, அப்போது ஈன்ற அதன் குட்டியை புகைப்படம் எடுத்து, அப்போது எழுதிய மாரா ஒரு மந்திரலோகத்தில் அது பற்றியும், நாங்கள் கிளம்பி ஒரு வாரத்தில் அந்த குட்டி இறந்த செய்தியையும் எழுதியிருந்தேன். அதன் புகைப்படத்தை இங்கு மறுபடியும் பதிவிடுகிறேன். 

இந்த வருடம் லுலூக்காவிற்கு இரண்டு அழகான குட்டிகள். மிகவும் பாதுகாப்பாக ஒரு ஓடையின் பொந்துக்குள் அவற்றை பத்திரப்படுத்தி விட்டு, லுலூக்கா மட்டும் வேட்டைக்காக அவ்வப்போது வெளியில் சென்று வருவது வழக்கமாயிருந்தது. 

இதற்கிடையில் இதன் வயிற்றில் பிறந்து, உயிர் பிழைத்து, கொஞ்சம் பெரிய மனிதனாகி (???) இருந்த ஒரு மகன்தான் இப்போது லுலூக்காவிற்கும், புதிதாய் பிறந்திருந்த இரண்டு குட்டிகளுக்கும் எதிரி என்ற செய்தி அறிந்து வருத்தமாயிருந்தது. 

லுலூக்கா பசிக்காக அன்று வெளியில் வந்திருக்கிறது. மாராவின் அந்த கரடு மொரடான பாதையின் ஜாக் வந்த வேகத்திற்கு, என்னையும் பாதுகாத்துக் கொண்டு, என் உபகரணங்களையும் பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. உள்ளது போதாதென்று வலது கை சுண்டுவிரல் பிரச்சினை வேறு.

ஆனால் சும்மா சொல்லக் கூடாது. ஜாக் அவ்வப்போது “பாலா Are you OK ? Are you OK?” என்று கேட்டுக் கொண்டே வந்தான். நான் “I am Not OK”  என்று சொன்னால், எங்கே திரும்பப் போய் விடுவானோ என்ற பயத்தில்  “I am perfectly alright” என்று பொய் சொன்னேன். “ பாலாவா ? பொய்யா ? சான்ஸே இல்லை” என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. 

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த

நன்மை பயக்கும் எனின்” என்று ஐயனே சொல்லிவிட்டதால், நானும் முதன் முறையாக ஒரு பொய் சொல்லி விட்டேன் ( ஹிஹிஹிஹி).

மிக வேகமாக எங்களுக்கு எதிர் திசையிலிருந்து எங்களை நோக்கி லுலூக்கா ஓடி வருவதை தூரத்திலிருந்தே எங்களால் பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் நம்ம பங்காளி சூரியனார் மெதுவாக வெளியில் வரத் தொடங்கினார். சூரியனின் அந்த ஆரஞ்ச் வெளிச்சத்தின் பின்புலத்தில் லுலூக்கா அமர்க்களமாக நடந்தும், ஓடியும், ஆங்காங்கே அமர்ந்தும் போஸ் கொடுக்க, எந்த ஒரு போஸையும் விடாமல் க்ளிக்கித் தள்ளி விட்டேன். ISO  கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்ற ஒரு பிரச்சினையைத் தவிர “ குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா” தான். செம குஷியாகி விட்டேன்.  

இதற்கிடையில், எங்களுக்கு எதிர் திசையில் இடதுபுறம் இருந்த ஒரு பள்ளத்துக்குள் ஒரு புதரில் “Reedbuck”  என்னும் ஒருவகை மான், தன்னைச் சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணராமல், ஏகாந்தமாய் மேய்ந்து கொண்டிருந்ததை அதன் வால் மட்டும் ஆடிக்கொண்டிருந்ததை வைத்து உணர முடிந்தது. அதன் உடல் முழுக்க புதருக்குள் இருந்தது.

அந்த மானை லுலூக்கா தூரத்திலிருந்தே பார்த்து விட்டது. 

மெதுவாக பதுங்கி பதுங்கி (ஸ்டாக்கிங்) நெருங்கத் தொடங்கியது. நான் அதன் ஒவ்வொரு அசைவையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தேன்.

ஒரு கட்டத்தில் அது வேகமாக பாயப் போவதை உணர்ந்து, பர்ஸ்ட் மோடில் போட்டு தட் தடவென்று எடுக்க ஆரம்பிப்பதற்கும், அது பாய்வதற்கும் மிகச் சரியாக இருந்தது. 

மிக அடர்த்தியான புதர் என்பதால், அடுத்த ஓரிரு நிமிடங்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

ஒரு சிறு போராட்டத்திற்குப் பிறகு, வழக்கம்போல் மானின் குரல் வளையைப் பிடித்து விட, மான் தன் போராட்டத்தை கை விட்டது. 

லுலூக்காவிற்கு, உடனே தன் இரையை பாதுகாக்க வேண்டுமேயென்ற பயமும் வந்து விட, புதரை விட்டு தன் இரையை வெளியே இழுத்துக் கொண்டு வந்தது. அப்போதும் மானுக்கு உயிர் இருந்ததால், அங்கேயே இருந்து மானின் குரல் வளையை ஒரு இரண்டு நிமிடங்கள் நெறிக்க, மானின் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து போவதை என்னால் உணர முடிந்தது. 

இனி அந்த மானால் கண்டிப்பாக ஓட முடியாது என்பதை உறுதி செய்தபிறகே, அதன் கழுத்தை விட்டு விட்டு அதன் உடலை சாப்பிட ஆரம்பித்தது.

எப்போது வேண்டுமானாலும் கழுதைப் புலிகள் வந்துவிடும் அபாயம் இருந்ததால், மானின் உடலை தின்று கொண்டே, அதன் உடலை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தடியில் கொண்டு போய் சேர்த்தது.

கண்ணுகெட்டிய தூரம் வரை தன் இரைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்த பின், மரத்தடியிலேயே வைத்து தன்னுடைய பிரேக் ஃபாஸ்ட்டை முடித்தது. 

அது மானின் குரல்வளையை கவ்விக் கொண்டே என்னை கண்ணோடு கண்ணாக பார்த்தது வாழ்க்கையில் மறக்க இயலாது. 

ஒரு வினாடி எனக்கு ஜில்லிட்டு விட்டது. 

இந்த பயணத்தில் நான் பார்த்த மூன்றாவது வேட்டையிது.

இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. 

ஆனால், அன்று மாலையே எனக்கு இன்னும் ஒரு டிராமா காத்திருந்தது. அது மிகவும் வேடிக்கையான ஒரு டிராமா.

வெ.பாலமுரளி

பி.கு:  நான் மாராவை விட்டு கிளம்பி ஓரிரு நாட்களில் , லுலூக்கா இந்தமுறையும் தன்னுடைய இரண்டு குட்டிகளையும் பறி கொடுத்து விட்டதாம். அவை அந்த புதருக்குள் தூங்கிக் கொண்டிருந்ததை படம் எடுத்திருந்தேன். அவற்றின் முகத்தைப் பார்த்திருக்காவிட்டாலும் கூட அந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *