முள்றியின் டைரி : 85 – மாரா ஒரு மந்திரலோகம் : 15

வேட்டையாடு விளையாடு : 2

“ எதிர்பார்ப்பே ஏமாற்றத்திற்குக் காரணம் “ இது எங்கள் அப்பா உயிருடன் இருக்கும்போது அடிக்கடி சொல்லும் வாசகம்.

இதை நான் வாழ்க்கையில் கடைபிடிக்கிறேனோ இல்லையோ, காட்டில் கண்டிப்பாகக் கடைபிடிப்பேன்.

அதையும் மீறி சில நேரம் ஆசை தலைதூக்கி, சில எதிர்பார்ப்புகளைக் கொண்டு வந்து விட்டு விடுகிறது. தவிர்க்க முயற்சிக்கிறேன். சில சமயங்களில் முடிவதில்லை. 

அன்றும் அப்படித்தான். 

28 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட “டோப்பி”  (சிங்கக் ) குடும்பம் கண்டிப்பாக இன்று காட்டெருமையை வேட்டையாடப் போகிறது என்று என் உள்ளுணர்வு சொன்னது. காரணம், அங்கு நான் போய் நான்கு நாட்களும் தினமும் அதைக் கண்காணித்து வந்தோம். எந்தவொரு வேட்டையும் இல்லாமல் மொத்த குடும்பமும் பசியோடு இருந்தது. அதன் அருகிலேயே 50 உறுப்பினர்களுக்கும் மேலே உள்ள ஒரு காட்டெருமைக் கூட்டமும் மேய்ந்து கொண்டிருந்தது வேறு என் ஆவலை மேலும் அதிகப்படுத்தியது ( மழை வரவேண்டுமென விவசாயி பிரார்த்திக்கிறான். மழை வரக் கூடாதென்று கூத்தாடி பிரார்த்திக்கிறான். எது நடந்தாலும் சரி. இறைவனுக்கு இரண்டு தேங்காய்கள் – கண்ணதாசன் ).

போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஒட்டு மொத்த குடும்பமும் உறங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சம்கூட எழுந்திருக்கும் அறிகுறியே தெரியவில்லை. “ப்ளடி Lazy ஃபெல்லோஸ் வித் பில்லோஸ்” என்று மனதுக்குள்ளேயே திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

‘ஒரு வாசல் மூடி ஒரு வாசல் திறப்பான் இறைவன்’ என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. அன்றும் அப்படித்தான்.

டோப்பி குடும்பத்தை விட்டு கிளம்பி ஒரு அரை மணி நேரம் பயணித்திருப்போம். சைலஸ் பாய்ஸில் ( சைலஸ் பாய்ஸ் – 3 ஆண் சிங்கங்கள். ஒவ்வொன்றிற்கும் அட்டகாசமான பிடரி இருக்கும்) ஒருவன் மட்டும் இரைக்காக அங்கும் இங்கும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். கொஞ்சம் தூரத்திலேயே அவனுடைய காதலி “ டோப்பி மாமா “ ( ஸ்வஹிலியில் “மாமா” என்றால் மிகவும் மரியாதையாக பெண்களைக் குறிக்கும் சொல் – லேடி ). 

டோப்பி குடும்பத்தில் உள்ள லேடிஸ் அவ்வப்போது இப்படி சைலஸ் பாய்ஸ், ப்ளாக் ராக் பாய்ஸ் என்று  சில இளைஞர்களுடன் டேட்டிங் போய் வருவது வழக்கம்.

அந்த யங் லேடியும் ஒரே இடத்தைக் குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு இரையை குறி வைத்து விட்டது என்பது புரிந்தது, ஆனால் அது என்ன என்று மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்டெருமையோ, வரிக்குதிரையோ, வில்டபீஸ்ட்டோ கண்ணுக்குத் தென்படவில்லை.

அப்போது எங்கள் வாகனம் ஒரு பள்ளத்தில் இருக்க, சிங்கங்கள் இரண்டும் மேடான ஒரு பகுதியில் இருந்ததும் ஒரு காரணம்.

அது போன்ற லொக்கேஷன்ஸ் சில்யூட் எடுக்க அருமையாக இருக்கும். ஆனால், ஹண்ட்டிங் சிச்சுவேஷன் கொஞ்சம் பிரச்சினைதான். காரணம், ஹண்டிங்கின் போது அவை மேட்டின் மறுபக்கம் துரத்தி போய் விட்டால், வடை போச்சே சிச்சுவேஷன்தான். எங்களால் வாகனத்தை எடுத்து வேறு இடத்திற்குச் செல்ல அவகாசமில்லை. போவதற்குள் ஹண்டிங் முடிந்தாலும் முடிந்தாலும் முடிந்து விடும். எனவே, வருவது வரட்டும் என காத்திருந்தோம். 

எங்களால் அவற்றின் இரையைப் பார்க்க முடியாவிட்டாலும்,  லவ்வர்ஸ் இரண்டு பேரும் ரொம்பவே ஃபோக்கஸ்டாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அப்போதுதான் கவனித்தேன். ஒரு காட்டுப் பன்றி ( பூம்பா ) ஒன்று இரண்டு சிங்கங்களுக்குமிடையில் மிகவும் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தது. அது நடந்த திசையில் அந்த ஆண் சிங்கம் நின்று கொண்டிருந்தது. பூம்பாவைப் பார்த்து அது பதுங்கக் கூட இல்லை.

புல் கொஞ்சம் உயரமாக இருந்ததாலும், பூம்பா ரொம்ப குட்டையாக இருந்ததாலும், அதால், அந்த சிங்கத்தைப் பார்க்க முடியவில்லை என்று நினைக்கிறேன். 

ஆனால், அது அந்த ஆண் சிங்கத்தை நோக்கி கம்பீரமாக நடந்த தோரணை, சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கப் போய்க் கொண்டிருந்தது போலவே இருந்தது. 

அந்த நேரம் பார்த்து என் கையில் 500 மிமீ லென்ஸ் இருந்ததால், அந்த மூன்றையும் சேர்த்து ஒரு வைட் ஆங்கிள் ஷாட் எடுக்க இயலவில்லை. 

இன்னொரு கேமராவில் 24 -105 மிமீ ஐ மாட்ட அவகாசமில்லை. சரி, கையில் இருப்பதை வைத்தே எடுப்போம் என்று க்ளிக்க ஆரம்பித்தேன்.

வெகு கம்பீரமாக போய்க் கொண்டிருந்த பூம்பா, புல் இல்லாத ஒரு சமவெளியை அடையும்போதுதான் அந்த சிங்கத்தை கண்ணோடு கண்ணாகப் பார்த்தது. அவ்வளவுதான், ஒரு நொடியில் தன் முட்டாள்தனத்தை உணர்ந்து வந்த வழியிலேயே திரும்பி ஓடத் தொடங்கியது.

சிங்கங்களின் வேட்டையாடும் தந்திரம் ( Strategy) மிகவும் துல்லியமாக இருக்கும். பூம்பா திரும்பி ஓடத் தொடங்கி சிறிது தூரத்திலேயே அந்த பெண் சிங்கத்தைச் சந்தித்தது. ஒரு நொடி அது விக்கித்து நின்றதை என்னால் உணர முடிந்தது. இவை அனைத்தும் புற்களின் ஊடே நடந்ததால் என்னால் ஃபோக்கஸ் பண்ணுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என்னுடைய ஃபோக்கஸ் புல்லிலேயே போய் உட்கார்ந்தது.

என்னுடைய அனைத்து செட்டிங்ஸூம் மேனுவலாக இருந்ததால், அவை ஓடும் ஒவ்வொரு திசையிலும் லைட்டிங் வேறு வெவ்வேறாக வந்து என்னை படுத்தி எடுத்தது. அதை வேறு அவ்வப்போது மாற்றிக் கொண்டே க்ளிக்கிக் கொண்டிருந்தேன். மிகவும் சவாலான சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையை முன்பே சில முறை சந்தித்திருக்கிறேன்.

அந்த குட்டியூண்டு பூம்பா இரண்டு சிங்கங்களுக்கும் தண்ணீர் காண்பித்தது. இதற்கிடையில் ஒரு எறும்புப் புற்று குறுக்கிட, பூம்பா அதைச் சுற்றிச் சுற்றி ஓட, கரெக்டாக அந்த ஆண் சிங்கமும் அங்கு வந்து சேர, கேம் ஓவர்.

ஆண் சிங்கம் பூம்பாவின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. என்னுடைய நேரம், அந்த சம்பவம் அந்த எறும்புப் புற்றுக்குப் பின்னால் நடந்தது.

ஜாக் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்திற்கு சென்று விட்டான். 

நாங்கள் அங்கே போவதற்கும், அந்த ஆண் சிங்கம் கரெக்டாக பூம்பாவின் குரல் வளையைக் கவ்வுவதற்கும் சரியாக இருந்தது. 

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த பெண் சிங்கம் பூம்பாவின் பின்பகுதியை கடித்து உண்ணத் தொடங்கியது – பூம்பா உயிருடன் இருக்கும்போதே. அது ஒரு தந்திரம். ஒரு வேளை அந்த பூம்பா தப்பிக்க நினைத்தாலும், இனி முடியாது. சைக்கலாஜிக்கலாகவும் அது வீக்காகி விடும்.

சில நிமிடங்கள் அந்த ஆண் சிங்கம் பூம்பாவின் குரல் வளையை விடவேயில்லை. ஓரளவுக்கு அது இறந்து விட்டதை உறுதி செய்தபின் அது, பெண் சிங்கத்தை விரட்டி விட்டு அதன் இரையை இழுத்துச் சென்று (அது மட்டும்) உண்ணத் தொடங்கி விட்டது. லவ்வு வேற இது வேற போலிருக்கு என்பது அந்த பெண் சிங்கத்துக்கு அப்போதுதான் புரிந்தது போல. வடை போச்சே என்று சோகத்துடன் அங்கிருந்து நடந்து போனது.  

இந்த முறை நான் பார்த்த இரண்டாவது வேட்டை இது.

இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன மாராவை விட்டு கிளம்ப.

எனக்கு இதுவே போதுமென்றிருந்தது. அந்த அளவுக்கு எடுத்திருந்தேன்.

ஆனால், மறு நாள் காலை சிறுத்தையின் வேட்டை எனக்காகக் காத்திருந்தது தெரியாமலேயே மிகவும் திருப்தியுடன் விடுதிக்குத் திரும்பினேன்.

வரும் வழியில்தான் அட்டகாசமாக அந்த ஒற்றை யானை, மேகக் கூட்டத்துக்குள் நடந்து போகும் சில்யூட் கிடைத்தது. 

ஒரு புகைப்படக் கலைஞனுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்.

மனதார மீனாட்சிக்கு நன்றி சொல்லி விட்டு தூங்கச் சென்றேன்.

வெ.பாலமுரளி.