2021 ம் 2020 போலவே நிறைய ரணங்களை விட்டுச் செல்கிறது. 

எனக்கு என் அக்காவும் மாமாவும் , என் அப்பா அம்மாவிற்கும் ஒரு படி மேலே. ஒரு காலகட்டத்தில் திக்குத் தெரியாமல் நின்றபோது, நாங்கள் இருக்கிறோம் என என்னை அரவணைத்தவர்கள். 

கொரோனா இரண்டாவது அலையில், அடுத்தடுத்த நாளில் ஒருவர் பின் மற்றொருவராக இரண்டு பேருமே மறைந்து விட்டனர். 

இந்தக் கொடுமையை ஜீரணிப்பதற்குள்ளாக அடுத்த 10 நாட்களில், இறந்த என் அக்காவின் இரண்டாவது பையனும் (38 வயது) மரணித்தது இன்று வரை நம்ப முடியவில்லை.

நாங்கள் அனைவரும் இடிந்துபோய் உட்கார்ந்திருந்த நிலையில் என் ஒன்று விட்ட தங்கையின் பையன் (33 வயது) மறைந்த செய்தி, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாத ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றது.

லாக்டவுன் பிரச்சினையால் இவர்கள் யாரையும் போய்ப் பார்க்கவோ, இறுதி மரியாதை செய்யவோ இயலவில்லை. கொடுமையிலும் கொடுமை. 

“ சாவே உனக்கொரு நாள் சாவு வாராதோ ?

தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ ?” என்ற கண்ணதாசனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்த வருடம் இந்த பாழாய்ப் போன 2021.

இதற்கிடையில், பாறை ஓவியங்களைத் தேடுகிறேன் பேர்வழி என்று கரடு முரடான மலைப் பகுதிகளில் ஏறி மூன்று முறை முழங்கால், உள்ளங்கை என்று சவ்வுகளைக் கிழித்துக் கொண்டேன். செம வலி.

சோர்ந்து துவண்டு போன இந்த வருடத்தில் ஒரு சில நல்ல விஷயங்களும் நடந்தேறியது ஒரு சின்ன ஆறுதல்.

டிப்ளமோ இன் ஆர்க்கியாலஜி முடித்தேன். 

2020 இல் கட்டத் தொடங்கிய ஒரு சின்ன தோப்பு வீடு, இந்த வருட ஆகஸ்ட்டில்தான் முடிந்தது ( வெறும் அறுநூறே அறுநூறு சதுர அடி. முடித்துக் கொடுக்க ஒரு வருடம் ஆகி விட்டது) .

கட்டட காண்ட்ராக்டர்களின் தொழில் தர்மத்தின் படி, என்னுடைய காண்ட்ராக்டரும் பணம் வாங்கிக் கொண்டு என்னை முறைப்படி ரவுண்டில் விட்டார். அரை குறை வேலை. பாதி நாட்களில் வேலையே நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஏதாவது முடித்துக் கொடுத்து விட்டு சைட்டை காலி பண்ணு ராசா என்று சண்டை போட்டு விரட்டி விடும் ஸ்டேஜூக்கு கொண்டு வந்து விட்டான் மகராசன். பட்ஜெட்டும் 50% எகிறி விட்டது.  

மற்றபடி….வருடா வருடம் எடுக்கும் உறுதி மொழிகள் இந்த வருட தொடக்கத்திலும் எடுத்தேன். ஒரே ஒரு வித்தியாசம், பொதுவாக நான் எடுக்கும் உறுதிமொழிகளை எல்லோருக்கும் சொல்லி விடுவேன். அதனால்தானோ என்னவோ கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழியயும் என்னால் பின்பற்ற முடிந்ததேயில்லை.

அதனால், இந்த வருடம் நான் எடுக்கும் உறுதிமொழிகளை யாரிடமும் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்து அதைக் காப்பாற்றவும் செய்தேன்.

ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் உலக மகா ஆச்சரியம்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இந்த வருடமும் எந்தவொரு புண்ணாக்கு உறுதிமொழியையும் என்னால் பின் பற்ற முடியவில்லை.

கென்யாவுக்கு ஒரு ட்ரிப் செல்வதற்கு டிக்கெட் இருந்தது. அதன் காலக் கெடுவரை இந்த டிசம்பருடன் முடிவதால் அடித்துப் பிடித்து இந்த நவம்பரில் ஒரு ட்ரிப் சென்று வந்தது ஒரு மிகப் பெரிய ஆறுதல்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து கென்யாவில் என் நெருங்கிய நண்பர்கள் அனைவரையும் சந்தித்தது இந்த வருடத்தின் மிகப் பெரிய இரண்டு சந்தோஷங்களில் முதலாவது. 

இவ்வளவு தூரம் வந்து விட்டோமே என்று வேண்டா வெறுப்பாக மசை மாராவுக்கும், அம்போசலிக்கும் ஒரு ட்ரிப் போய் வந்தேன் ( ஹிஹிஹிஹிஹிஹி). அங்கும் என் நண்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

அடுத்ததாக ரஷ்யாவில் என்னுடன் படித்த நெருங்கிய நண்பர்கள் சிலர் சேர்ந்து மதுரைக்கு வர, அவர்களுடன் சேர்ந்து தென் தமிழகத்தைச் சுற்றியது இரண்டாவது மிகப் பெரிய சந்தோஷம். அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் எங்கள் தோப்பில் செம ஆட்டம். 

தோப்பு என்றதும், நாட்டாமை பட சீனையெல்லாம் நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த அளவுக்கு வொர்த் இல்லை. சும்மா இருபதே இருபது தென்னை மரங்கள். அம்புட்டுதேன். 

இனி அடுத்த வருஷத்துக்கு பிளான் பண்ணோனும் – இங்கேயே மிச்ச சொச்ச காலத்தை கழித்து விடலாமா இல்லை திரும்ப கென்யா இல்லை துபாயில் கேக்ரான் மேக்ரான் கம்பெனி போல ஏதாவது ஒண்ணில் போய் சேர்ந்துரலாமான்னு. 

இனி டிவி யில் வரும் ஸோதிட திலகங்களையெல்லாம் நம்ப வேண்டாமென்று முடிவு செய்து விட்டேன். 

எனவே, உங்களுக்குத் தெரிந்த கிளி ஸோஸியக்காரன் யாராவது இருந்தால் சொல்லுங்க மக்கா. 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

2022 அனைவருக்கும் மிகவும் இனிதே அமைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். 

வெ.பாலமுரளி