வேர்களைத் தேடி – 8 வானியல் பேசும் புலிப்பொடவு 

மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு.

புலிப்பொடவு என்றால் புலி வசிக்கும் குகை என்று பொருள். அதை நிரூபிக்கும் வகையில் இங்கு செஞ்சாந்து நிறத்தில் ஒரு புலியின் பாறை ஓவியம் வரையப்பட்டுள்ளது இன்றும் மங்கலாகத் தெரியும் இந்த ஓவியம் 6000 முதல் 8000 வருடங்கள் வரை பழைமையானதாக இருக்கலாம்.  

இந்தக் குகையின் உட்புறத்தில் சில கற்படுக்கைகள் இருந்திருக்க  வேண்டும். தற்சமயம் யாரோ சிலரால் அவை சிமெண்ட் பூச்சால் பூசப்பட்டு, அதில் ஒரு திண்டும், அதன் மேல் ஒரு லிங்கமும் நிறுவப்பட்டு மாற்றமடைந்துள்ளது. 

இது போன்ற இடங்களில்தான் அறிவர்கள் அல்லது ஆசீவக ஐயன்கள் வாழ்ந்து வானியல் பற்றியும் மருத்துவம் பற்றியும் ஆய்வு செய்து வந்திருக்கின்றனர். (இவர்கள் கண்டுபிடித்த மருத்துவம்தான சித்த மருத்துவமாக இருக்க வேண்டும்). இதை நிரூபிக்கும் வகையில் இந்த அறிவர்கள் வாழ்ந்த அனைத்துக் கற்படுக்கைகளிலும் மருந்துகள் அரைக்கும் குழிகளை இன்றும் காண முடியும். 

இந்த அறிவர்கள் பற்றி, தொல்காப்பியர் தன்னுடைய 153 மற்றும் 154 செய்யுளில்

“கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள

நல்லவை யுரைத்தலும் மல்லவை கடிதலுந்

செவிலிக்குரிய வாகுமென்ப

சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய”

என்கிறார். 

(தொல். பொருள்.கற்பியல். 153, 154)

அதாவது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூவகைக் காலங்களையும்  ஆராய்ந்து வாழ்க்கையில் நல்வழி நிலைபெறுமாறு நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைப்பது அறிவர் மரபாகும் என்பது இதன் பொருளாகும்.

இதிலிருந்து அறிவர்கள் என்னும் சித்தர்கள் முக்காலத்தையும் ஆய்வு செய்பவர்கள் என்பது தெளிவு. 

இந்த அறிவர் மரபிலிருது பிரிந்தவர்களே பின்னாளில் கணியர்கள், வள்ளுவர்கள் என்று அறியப்பட்டார்கள். 

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார், மதுரை மாங்குளம் கல்வெட்டு சொல்லும் கணி நந்தன், அழகர் மலை கல்வெட்டு குறிப்பிடும் கணி நாகன், கணி நாதன் போன்ற அனைவரும் இந்த அறிவர் / கணியன் மரபினரே.

இந்த அறிவர்கள்தான்  அமணர்கள் என்னும் ஆசீவகர்ளாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

இதை நிரூபிக்கும் வகையில், மேட்டுப்பட்டியில் உள்ள சித்தர் மலைக் கல்வெட்டில் முதல் கல்வெட்டே “ அமணன் மதிரை..” என்று தொடங்குகிறது. இதன் காலமும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்கிறது நமது தொல்லியல் துறை. அதாவது  2200 வருடங்கள் பழைமையானது.

இந்த வானியல் ஆய்வை புலிப்பொடவில் வெண்சாந்து ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர் நமது “ அறிவர்கள் “ என்னும் ஆசீவகர்கள். 

முழு நிலவிலிருந்து அமாவாசையாக தேயும் காலத்தை 14 ½ நாட்கள் என 14 பெரிய கோடுகளும் ஒரு சிறிய கோட்டை சற்று மேலாகவும் வரைந்து வைத்துள்ளனர். 

அத்துடன் இடது கையில் வில்லுடன் வலது கையை உயர்த்திப் பிடிப்பது போன்ற தோற்றமுடைய “ ஓரையான்” என்னும் ஒரு நட்சத்திரக் குடும்பம் ( உடுக்கணம்), நட்சத்திரங்களைக் குறிக்கும் நிறைய புள்ளிகள், மற்றும் வானியல் தொடர்பான நிறைய குறியீடுகள் என்று ஒரு வரலாற்றுப் புதையலாகவே இருக்கிறது இந்தப் புலிப் பொடவு.

இவை வெண்சாந்து ஓவியங்களாகவே இருந்தாலும் கூட இந்த ஓவியங்களின் காலம் 5000 வருடங்களுக்கும் முற்பட்டவையாக இருக்க வேண்டும் என்கிறார் வானியல் மற்றும் பாறை ஓவிய ஆய்வாளர் உயர்திரு. பாலாபாரதி. 

இதில் இன்னொரு ஆச்சரியம், இந்த ஓவியத்தில் உள்ள சந்திரனைச் சுற்றி 21 கோடுகள் வரையப்பட்டுள்ளன. இது பற்றி காலச்சக்கரம் என்னும் நமது தமிழ் இலக்கியம் 

“ ஐந்திருபத் தொன்றேழ் அதன்பின்நோற் கொன்பது பத்(து) 

உந்தியலீரெட்டு நான் கொருனான் (கு)..” 

என்று சூரியனுக்கு ஐந்து ரேகைகள் (கோடுகள்) , சந்திரனுக்கு 21 ரேகைகள் (கோடுகள்) என்று குறிப்பிடப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார் பாலாபாரதி அவர்கள்.

இந்த வானியல் ஓவியங்கள் தவிர அதே வெண்சாந்து நிறத்தில் ஒரு பெண் பிரசவிப்பதையும் தெளிவாக வரைந்து வைத்துள்ளனர். ஆச்சரியம். 

மொத்தத்தில் இந்தப் புலிப்பொடவு அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அதிசயம் மட்டுமல்ல, நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டிய ஒரு வரலாற்று பொக்கிஷமும் கூட.

வெ.பாலமுரளி.

நன்றிகள் : இந்த இடத்தைப் பற்றி எனக்குச் சொல்லி என்னை இரண்டு முறை அழைத்துச் சென்ற பாலா பாரதி அவர்கள் மற்றும் இந்த இடத்தைக் கண்டுபிடித்த உயர்திரு. காந்திராஜன் அவர்கள்.