முள்றியின் டைரி : 83 – மாரா ஒரு மந்திரலோகம் : 13

எனக்கு ஒவ்வொரு முறை மசை மாரா செல்லும்போது உடல் நிலையில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து படுத்தி எடுத்து விடும். அது என்ன ராசி என்று தெரியவில்லை.

ஒரு முறை வறட்டு இருமல் படுத்தி எடுத்தி விட்டது. ஒரு முறை குளிர் காய்ச்சல் (என்னுடைய பெஸ்ட் ஃபோட்டோஸ் சில,  அப்போது எடுத்ததுதான்). ஒரு முறை உட்காரும் இடத்தில் கட்டி ( நம்ம கிரேஸி மோகன் சொல்வது போல தள்ளி உட்கார்ந்தும் பார்த்தேன். ஆனால், கட்டியும் கட்டியும் கூடவே வந்துச்சு). இன்னொரு முறை தண்டுவடத்தில் இரண்டு வட்டுக்கள் ( அதாங்க “டிஸ்க்”) தடம் பெயர்ந்து விட்டன ( அப்போதுதான் நரகத்தில் மிஸ்டர் எமனாருடன் ஒரு நேரடி சந்திப்பு நடந்தது- மசை மாராவில் வைத்தே ). 

நம்ம தெனாலி படத்தில் சொல்வது போல மீனாட்சி எனக்குக் கொடுக்கும் “ட்ரீட்மெண்டாகவே” இவற்றை எடுத்துக் கொள்வேன் ( வேறு வழி ? காசு எல்லாம் கொடுத்து புக்கிங் பண்ண பிறகு கேன்சல் பண்ண இந்த பாழாய் போன மனசு வர மாட்டேங்குதே ).

இந்த முறை எனக்கு அடுத்தடுத்து இரண்டு பிரச்சினைகள். இரண்டும் வலது கையிலேயே. 

கிளம்புவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே வலது கை முழங்கையில் “டென்னிஸ் எல்போ” ( டென்னிஸ் “எல்போ” என்பது முழங்கையில் வராமல் உள்ளங்கையிலா வரும் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது). நானும் விடாமல், “பாகப் பிரிவினை சிவாஜி” மாதிரி வலது கையை மடக்கி வைத்துக் கொண்டு என் வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தேன். மீனாட்சி குண்டம்மா காண்டாகி இருக்க வேண்டும்.

அவளும் விடாமல் இந்த ஏழரையை என்ன செய்தால் அடங்குவான் என்று யோசித்திருக்க வேண்டும். “உடைடா விரலை” என்று ஒரு விபத்தில் என் வலது கை சுண்டு விரலை உடைத்து விட்டாள் குந்தாணி. அதுவும் கென்யா கிளம்புவதற்கு மிகச் சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னால். 

வெளியில் வருத்தப்பட்டாலும் உள்ளூர சந்தோஷப்பட்டாள் என் மனைவி.  “இனியாவது அடக்கிப் போட்டு வீட்டில் உட்காருவான்” என்பது அவள் கணக்கு (யாருகிட்ட….).

மாவுக் கட்டு போடச் சொன்னார் டாக்டர். மாவுக் கட்டா ???? ஒன்றுக்கு ரெண்டு கேமராக்கள் வேற….ரொம்ப முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லி விட்டு, இரண்டு விரல்களைச் சேர்த்து ஸ்ட்ராப் மட்டும் போட்டு விட்டு,கையைச் சுற்றி எலாஸ்ட்டிக் பாண்ட் போட்டுக் கொண்டு கெளம்பிட்டோம்ல…..

மசை மாரா போய் இறங்கிய முதல் நாளே சோதனை ஆரம்பித்து விட்டது.

பாலாவைப் பார்த்ததும் மசை மாராவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை என்று நினைக்கிறேன். மழை அடித்துத் துவைத்து விட்டது. 

“இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலமுரளி” என்று என்னை நானே நொந்து கொண்டு என்னுடைய முதல் சஃபாரியைத் தொடங்கினேன். எல்லா இடத்திலும் சேறு, சகதி.  பெரிதாக ஒன்றும் எடுக்க முடியவில்லை.

மாராவின் மறுபக்கத்தில் (அட…இந்த டைட்டில்கூட நல்லாயிருக்கே), இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது

அப்போதுதான் இந்த ஒட்டகச் சிவிங்கியைப் பார்த்தேன். மழையின் பின்புலத்தில் அது நடந்து வந்தது கொள்ளை அழகாக இருந்தது.

அதை மட்டும் எடுத்து  விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

இப்படியாக என் முதல் நாள் சஃபாரி முடிந்தது.

வெ.பாலமுரளி