முள்றியின் டைரி : 82 – கரும்புக் காட்டுக்குள் பாறை ஓவியம்

பாலாபாரதி சாருடன் பயணித்தால் உங்களுக்கு கண்டிப்பாக இரண்டு விஷயங்களைக் காண்பித்து விடுவார்.

ஒன்று : சொர்க்கத்தின் எல்லை.

மற்றொன்று : நரகத்தின் எல்லை 

சிறுமலை பள்ளத்தாக்கில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கு ஒரு கட்டத்தில் நம்பிக்கை போய் விட்டது. சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடலாம் என்று முடிவெடுத்து திரும்பினேன். அவர் “பள்ளத்தாக்கில் வழுக்கி விடலாம் என்பதற்காக” என்று சொல்லிக் கொண்டு ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு எனக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்தார். அவருடைய பார்வை “ மவனே…இங்கிருந்து ஓடி மட்டும் பாருலே…மண்டையை பொளந்துருவேன்” என்று சொல்வது மாதிரியே இருந்தது.

அதற்கு அப்புறமும் திரும்பி ஓடுவதற்கு எனக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு. விதியை நொந்து கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம். ஆனால், அங்கிருக்கும் பாறை ஓவியங்களைப் பார்த்த போது ஒரு பீலிங்கு வந்துச்சு பாருங்க. அப்படியே ஜிவ்வுனு வ(வா)னத்தில் பறப்பது போலிருந்தது. சான்ஸே இல்லை.

இதுபோல இடத்தைப் பார்ப்பதாயிருந்தால் இன்னும் ஏழு மலை ஏழு பள்ளத்தாக்கு கூட நடக்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

ஆங்…சொல்ல மறந்துட்டேனே. பாலாபாரதி சார், கணக்கு மற்றும் வானவியலுடன் “ மைண்ட் வாய்ஸ் ரீடிங்” கிலும் பக்கா கில்லாடி.

நான் மனதில் நினைத்த “ ஏழு மலையைக் கூட” கடக்கலாம் என்ற வார்த்தையை மட்டும் கப்பென்று பிடித்துக் கொண்டார்.

ஒரு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் போயிருக்கும். பாலாபாரதி சாரிடமிருந்து ஒரு ஃபோன் கால். 

“சார், கண்ணகிக் கோட்டம் போவோம். வருகிறீர்களா ?” என்றார். நான் துள்ளிக் குதித்து உடனே “ சரி சார். போவோம்” என்றேன். “ தப்பு பண்ற கொமாரு “ என்று எந்த அசரீரியும்  எனக்குக் கேட்கவில்லை. 

கண்ணகிக் கோட்டம் செல்வது என்பது கே.ஜி.எஃப், பாகுபலி  மற்றும் பொன்னியின் செல்வன் போல ஒரு மெகா ப்ராஜக்ட். பழைய ராஜகுமாரன் கதையில் வருவது போல நிஜமாகவே ஏழு மலைகளைக் கடந்து சென்றால்தான் அந்தக் கோயிலைக் காண முடியும் ( இப்ப நம்புறீங்களா அவரு மைண்ட் வாய்ஸ் ரீடிங்குல எக்ஸ்பெர்ட் என்று ?).

அந்தா இந்தா என்று கெளம்பிட்டோம். ஏழு மலைன்னா ஏழும் சரியான மலைகள். அதிலும் ரெண்டு மலை 90 டிகிரி கோணத்துல வானத்துக்கும் பூமிக்கும் கட்டுன சுவரு மாதிரி ஜிங்குன்னு நிக்கிது.

முதல் இரண்டு மலைகள் அப்படி இருந்திருந்தா, ஆரம்பத்துலேயே ஓடியாந்துருப்பேன். ஆனா, என் நேரத்துக்கு அஞ்சாவதும், ஆறாவதும் தான் கைலாசத்துக்கு நெட்டுகுத்தா ரோடு போட்ட மாதிரி இருந்துச்சு. 

நானும் விடவில்லை. வழக்கம்போல் என் விதியை நொந்து கொண்டே தம் பிடிச்சு முதல் செங்குத்து மலையில் ஒரு முக்கால் வாசி தூரம் ஏறிட்டேன். அப்பத்தாங்க ஒரு ஏழரை, விண்ணைத் தாண்டி சாரி…என்னைத் தாண்டி போச்சு. அந்த ஏழரைக்கு இது இரண்டாவது ட்ரிப்பாம் ( எதே…ரெண்டாவது முறையா ? நம்ப முடியவில்லை…இல்லை…இல்லை …).

போற போக்குல அந்த ஏழரை என்னைப் பார்த்து “ சார் திரும்பிப் பார்க்காம ஏறுங்க “ன்னு சொல்லிட்டு போயிருச்சு ( நான் எங்கடா திரும்பிப் பார்த்தேன் ?????? ).

அது சொன்னதுக்கப்புறம்தாங்க திரும்பிப் பார்க்கணும்னே தோணுச்சு. பார்த்தா… நம்ம சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி தலை கிர்ருன்னு சுத்திருச்சு. ரம்பா, ஊர்வசியெல்லாம் டான்ஸ் ஆடுவது தெரிய ஆரம்பித்து விட்டது ( ஹி…ஹி…ஹி ).

பெரிய புராணத்துல ஏதோ ஒரு நாயனார் சிவ லிங்கத்தை ஆலிங்கணம் செய்து கொண்டு “ஹரஹரா”ன்னு கத்தினார்னு படிச்சிருக்கேன். கிட்டத்தட்ட அதே சிச்சுவேசன். அப்படியே மலையை இறுக்கக் கட்டிப் பிடிச்சிட்டேன்.       

ஆனா, எல்லா சோலியும் முடிஞ்சு ( ???? ), பாதி உசுரோட சேரன் கட்டிய அந்த கண்ணகிக் கோட்டத்தைப் பார்த்த போது ஒரு பரவசம் வந்துச்சு பாருங்க….வாய்ப்பில்லை ராஜா.

ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல “ அடுத்து எங்கே சார் ? “ என்றேன்.

பாலாபாரதி சார் என்னை மாதிரி “படபட” கேரக்டர் கிடையாது. ரொம்ப கம்போஸ்ட். நிதானமாக “ சொல்றேன்” என்றார் ( “மாட்டிகிச்சு…. மாட்டிகிச்சு” என்ற ஹிப்ஹாப் தமிழனின் பாட்டு பேக்ரவுண்டில் ஓடுச்சுன்னு நினைக்கிறேன்). 

சமீபத்தில் ஒரு நாள் வழக்கம்போல் சாரிடமிருந்து ஒரு ஃபோன் கால். “விழுப்புரம் பக்கம் பாறை ஓவியங்கள்,குடைவரைக் கோயில்கள், தமிழிக் கல்வெட்டுக்கள் என்று ஒரு ட்ரிப் போவோமா” ? என்றார். சொல்லி விட்டு, “ இதில் ஆபத்தான பயணம் ஒன்றும் கிடையாது” என்றார் – வழக்கம்போல் என்னோட  மைண்ட் வாய்ஸ் ஃபோனிலேயே அவருக்கு கேட்டிருக்க வேண்டும். நான் “சூப்பர் சார்” என்றேன். நான் இப்படித்தான். சட்டுன்னு நம்பிருவேன்.

அந்த நாளும் வந்தது. விழுப்புரம் போய்ச் சேரும்போதே நேரமாகி விட்டது. பத்தாக்குறைக்கு டீ, பொறையெல்லாம் சாரி…டீ, பஜ்ஜி, சொஜ்ஜி (????) யெல்லாம் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மணி 12 ஆகி விட்டது.

அடிச்சிப் புடிச்சி ஆலம்பாடி, செத்தவரை, கீழ்வாலை என்று மூன்று இடங்களிலும் உள்ள பாறை ஓவியங்களைப் பார்த்து படங்கள், செல்ஃபி எல்லாம் எடுத்து அப்பப்ப ஃபேஸ் புக்குல ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டு முடிக்கும்போது மணி ஆறாகி விட்டது.  

மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஹோட்டலுக்கு போகலாமா சார் என்றேன். “போகலாம். ஆனால் போகும் வழியில் இன்னும் ஒரே ஒரு பாறை ஓவியம் மட்டும் பார்த்து விட்டு போய் விடலாம்” என்றார். “பரவாயில்லை. போகும் வழிதானே, சரி சார்” என்றேன்.

எங்களுடன் வந்த மற்றொரு நண்பர் ஒரு காவல்துறை அதிகாரி ( அரசு அலுவலர் என்பதால் அவர் பெயரை இங்கு குறிப்பிடவில்லை). காவல் துறை அதிகாரிகளுக்கே உரித்தான ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்ல “ எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு சார். நான் காரிலேயே இருந்து கொள்கிறேன். நீங்கள் மட்டும் போய் வாருங்கள் “ என்றார் ( செம்ம்ம்ம ஸ்மார்ட்டு ). 

நான், பாலா பாரதி சார், எங்களுடன் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன் என்ற ஒரு இளைஞன் என்று நாங்கள் மூன்று பேர் மட்டும், காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். 

பாலாபாரதி சாரும் அந்த இடத்திற்குப் போய் 10 வருடங்கள் ஆகி விட்டதாம். ஆனால், “அந்த மலை மட்டும் வயலுக்கு நடுவில் தனியாக நிற்கும். அது மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கு சார்” என்றார்.

எங்கள் நேரத்திற்கு அந்த ஏரியாவில் இருந்த எல்லா வயல்களிலும் ஒரு மலை இருந்தது. கன்பீசன் கன்பீசன் ஒரே கன்பீசன். 

குத்துமதிப்பாக ஒரு வயலில் இறங்கி நடந்தோம். திருவண்ணாமலை கிரிவலம் போல அங்கிருந்த ஒரு மலையை ஒரு மூன்று முறை சுற்றி வந்தோம். கடைசியில் அது இந்த மலை இல்லை சார் என்றார். அமாவாசை முடிந்து இரண்டு நாட்கள்தான் ஆகியிருந்ததால் ஒரே கும்மிருட்டு. வயல் நடுவில் நின்று கொண்டு அந்தப் பக்கம் வந்த ஓரிருவரிடம் “ புறாக்கல் பாறை எங்கேயிருக்குங்க? “ என்று கேட்டால், இந்தப் பக்கம் அப்படி ஒரு மலையே இல்லை என்று சத்தியம் செய்தார்கள். 

இயற்கையின் இரண்டாவது அழைப்பிற்காக அந்தப் பக்கம் வந்து உட்காரப்போன ஒருவரைப் பிடித்து விசாரிக்க, முகத்தில் ஏகப்பட்ட எரிச்சலுடன் ஒரு மலையைக் காண்பித்து, “அதுதான் புறாக்கல் மலை. சீக்கிரம் (???) போங்க இருட்டா இருக்கு” என்றார். நாங்க போறோம். “நீங்களும் போங்க சார்” என்று சொல்லி விட்டு கிளம்பினோம். 

அப்போதுதான் வயலில் அறுவடை நடந்து முடிந்திருந்ததால், நடப்பது ஒன்றும் சிரமமாயில்லை. ஆனால், இயற்கை உரங்களில் கால் வைத்து விடாமல் நடப்பது மட்டும் கொஞ்சம் ரிஸ்க் மாதிரி தெரிந்தது.

மலையை நெருங்கி விட்டோம். ஆனால், பாலாபாரதி சாருக்கு ஒரே குழப்பம். “இந்தமலை மாதிரித்தான் உள்ளது. ஆனால் ஏறும் வழி இப்படி இருக்காதே” என்றார்.  ஒரு வேலை மலையின் பின்பக்கம் வந்துவிட்டோமோ என்ற சந்தேகத்துடன் அந்த கரும் இருட்டில் மலை ஏறத் தொடங்கினோம். நல்ல வழுக்குப் பாறை. ஏறிய கொஞ்ச நேரத்திலேயே, “கண்டிப்பாக இந்த வழி கிடையாது. இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு இருபது அடி தூரத்திற்கு ஒரு நூல் ஏணி தொங்கும். அதைப் பிடித்துத்தான் செல்ல வேண்டும். ஆனால், அந்த நூல் ஏணியைக் காணோமே” என்றார். 

என்ன்ன்ன்னது…… நூலேணியா ?????? என்னால் க்ளிஃப் ஹேங்கரில் வரும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் போல நூலேணியைப் பிடித்துக் கொண்டு ஆகாயத்தில் தொங்குவதுபோல் நினைத்துப் பார்த்த மாத்திரத்திலேயே சல்லென்று வியர்க்கத் தொடங்கியது.  

அதற்குள் பாலாபாரதி சாரும், அந்த மோகன் என்ற இளைஞனும் மலையை விட்டு இறங்கி, இன்னொரு கிரி வலம் வரத் தொடங்க கொஞ்ச நேரத்திலேயே ஒரு கரும்புக் கொல்லை குறுக்கிட்டது. 

சுற்றிச் செல்வதற்குப் பதிலாக, உள்ளே புகுந்து சென்றால், மலையின் மறுபக்கத்தை எளிதாக அடைந்து விடலாம் என்று தம்பி மோகன் சொல்ல, உள்ளே புகுந்தோம். பார்த்தால் சிறியதாக தெரிந்த கரும்புக் காடு, போகப் போக வந்து கொண்டேயிருந்தது.

அப்பத்தான் தம்பி மோகன் மெதுவாக ஒரு குண்டைப் போட்டார். கம்பை தரையில் தட்டிக் கொண்டே வரவும். அங்கங்கே பாம்பு சுருண்டு கிடக்கும் என்றார். எனக்கோ பக்கென்று போய் விட்டது. 

பா…………….ம்………….பா ???????

எனக்கு இருந்த டென்ஷனில் கையில் இருந்த கம்பை டமால் டமாலென்று தரையில் தட்டிக் கொண்டே நடக்க, தம்பி மோகன் அடுத்த அணுகுண்டைப் போட்டார். “சார் இவ்வளவு சத்தமாக தட்டாதீர்கள். காட்டுப்பன்னி வந்து விடும். காட்டுப் பன்னி பாம்பை விட ரொம்ப ஆபத்து” என்றார்.

கா…….ட்….ட்ட்……டு….ப்…….ப………ப….ப…….ன்ன்ன்ன்ன்….னி…..யா ?

நாட்டுக்குள்ளதான் நிறைய பன்னிங்க திரியுதுன்னா , காட்டுக்குள்ளயுமா ? ( ஹலோ…நான் நெஜ பன்னிங்களை சொன்னேன் ). 

அது மட்டுமில்லாம, கையில் வேல் கம்புடன் ஆக்ரோஷமாக ஓடி வரும் அசுரன் பட தனுஷும் தேவையில்லாம என் நினைவிற்கு வர “ என்ன பொழப்புடா இது கொமாரு” என்று வாழ்க்கையே வெறுத்து விட்டது. 

ஆனால், கரும்புக் கொல்லை மட்டும் முடிவுறுவது போல் இல்லை. நல்ல வேளையாக இடையில் ஒரு வரப்பு குறுக்கிட, கொஞ்ச நேரம் அங்கேயே நின்று ஆசுவாசப்படுத்தத் தொடங்கினோம். 

இடைப்பட்ட நேரத்தில் , நமது பயணத்தைத் தொடர்வதா வேண்டாமா என்று ஒரு சின்ன டிஸ்கஷன் வேறு நடத்தினோம். அந்த இருட்டில் யாருடைய முகமும் யாருக்கும் தெரியாதலால், அவரவர் செல் ஃபோனில் உள்ள டார்ச்சை மற்றவர் முகத்தில் அடித்துக் கொண்டே பேசிக் கொண்டோம் ( வெள்ளைக்காரன் மாதிரி பளபளவென்றிருக்கும்  என் மூஞ்சி கூட அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹி…ஹி…ஹி…). 

அப்போதுதான் கவனித்தேன். வரப்பு நெடுக்க சிசிடிவி கேமராக்கள்……அத்துடன்  இரவிலும் படம் பிடிக்கும் இன்ஃப்ராரெட் கேமராக்களும் ஆங்காங்கே. 

பாலாபாரதி சாரும், மோகனும் கேமராக்களுக்கு தங்கள் முதுகைக் காண்பித்துக் கொண்டு நிற்க, நான் மட்டும் மதுரை வீரன் கணக்கா கேமராவைப் பார்த்தபடி ஃபுல் ஃபோக்கஸில் நின்றிருக்கிறேன்.

ஒரு நிமிடம், ஓடிருவோமா என்று தோன்றியது. ஓடினால் “ கன்ஃபர்ம்” ஆகி விடும் என்பதால், நான் குனிந்து கொண்டே, சார் எல்லா இடத்துலேயும் சிசிடிவி கேமரா வச்சிருக்காய்ங்கெ சார் என்றேன் அழுகின்ற குரலில்.

அதன் தீவிரத்தை உணர்ந்து உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பினோம் – ஆகாயத்தில் தொங்கும் அந்த நூல் ஏணியையும் பாறை ஓவியங்களையும் பார்க்காமலேயே.

மக்கா….இப்ப ஒரு சின்ன ரிக்வெஸ்ட். 

போன வாரம் விழுப்புரம் ஏரியா நியூஸ் பேப்பர்களில் என் படத்தைப் போட்டு “ கரும்புக் கொல்லைக்குள் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசம்” என்பது போல ஏதாவது செய்தி வந்தா என்னைய காட்டிக் கொடுத்திராதீக மக்கா. புண்ணியமா போகும்.

வெ.பாலமுரளி

பி.கு: இனிமே பாலபாரதி சார் என்னை எங்கேயும் கூப்பிடுவதற்கு ரொம்பவே யோசிப்பார்னு நினைக்கிறேன்.