இந்தப் படங்கள் கடந்த ஆகஸ்ட் 2019 இல் மசை மாராவில் எடுத்தது.

முதல் நாள் இரவே என்னுடைய டிரைவருக்கு,ஒரு குறிப்பிட்ட இடத்தில் “லூலு” என்னும் சிறுத்தை பிறந்து ஒரு வாரமே ஆன தன் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வருகிறது என்ற செய்தி கிடைத்து விட்டது. ஆனால்,அதை என்னிடம் சொல்லாமல்,பாலா, நாளை காலை நாம் சீக்கிரமே கிளம்ப வேண்டும். தயாராக இரு என்று சொல்லி என்னுடைய எதிர்பார்ப்பை ஏற்றி விட்டு தூங்கச் சென்று விட்டான்.

எனக்கு எப்படி தூக்கம் வரும். கொட்ட கொட்ட முழிதுக் கொண்டேயிருந்தேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து முடித்து,என்னுடைய கேமரா மற்றும் உபகரணங்களை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் காலடி வைக்கும்போது மணி சரியாக 5.

கிளம்பி ஒரு 30 அல்லது 40 நிமிடத்திற்குள்ளாகவே நாங்கள் லூலுவை ஸ்பாட் பண்ணி விட்டோம். அது தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு வெகு தொலைவு நடந்து வந்து ஒரு குழிக்குள் பத்திரமாக வைத்து,அருகில் உள்ள மரத்தில் ஏறி,கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கழுதைப் புலி,சிங்கம்,நரி ஏதேனும் இருக்கிறதா என்று பதை பதைப்புடன் தேடியது வாழ்க்கையில் என்னால் என்றென்றும் மறக்க முடியாது. 

நாங்கள் சென்று சிறிது நேரத்திலேயே மற்றும் சில வண்டிகள் வந்து விட்டன. அப்போதுதான் அங்கிருந்த ஒரு டிரைவர் லூலுவின் கண்ணீர்க் கதையைச் சொன்னார்.

லூலு குட்டி போடுவது இது மூன்றாவது முறையாம். முதல் இரண்டு முறையும் ஈன்ற குட்டிகளை அதன் ஆண் இணையே கொன்று விட்டதாம். ஆம்,இது Big Cat இனத்தில் ரொம்பவேCommon. குட்டிகள் இருந்தால் பெண் இனம் ஆணை தன் அருகில் நெருங்க விடாது. எனவே, தன்னுடைய குட்டிகளையே கொன்று விட்டு, பெண்ணை மறுபடியும் தன் இச்சைக்கு இழுத்து விடும். 

ஆனால், இந்த முறை லூலு பயந்தது தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் இன்னொரு ஆண் சிறுத்தைக்கு.Territorial War – இல் அந்த இரண்டு சிறுத்தைகளும் அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டிருக்க, இந்தப் பெண் சிறுத்தை தன் குட்டியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறது என்ற போது, இந்தக் குட்டியாவது உயிர் வாழ வேண்டும் என்று நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டிக் கொண்டோம். 

ஆனால், நான் இந்தப் படத்தை எடுது ஓரிரு வாரங்களுக்குள் அந்த இரண்டாவது ஆண் சிறுத்தையிடம் லூலு இந்தக் குட்டியையும் பறி கொடுத்து விட்டதாம். இந்த விஷயம் கேள்விப்பட்டு, மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

காட்டில் இருக்கும் கண்ணீர்க் கதைகளையெல்லாம் கேட்டால், நாம் படும் கஷ்டமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றும்.

பாலா.