கொஞ்சம் நீளமான கட்டுரை. ஆனால், இளைஞர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, கொஞ்சம் பொறுமையோடு இதைப் படிக்கவும்.

இன்று காலை ஒரு தம்பி, ஃபேஸ்புக்கில் ஏடாகூடமாக ஒரு கேள்வியைக் கேட்கப் போய், நிறைய நண்பர்கள் பொங்கி விட்டார்கள்.

அவர் கேட்ட கேள்வி என்னவோ சரிதான், ஆனால், கேட்ட விதம்தான் சரியில்லை என்பது என் கருத்து. 

“ நான் என்ஜினியரிங்கிலேயே என் கேரியரைத் தொடரவா அல்லது புகைப்படத்துறை அதை விட பெட்டரா ? “ என்று கேட்டிருக்கலாம். 

எனிவேஸ்….அனைவருக்கும் அவர் என்ன கேட்க வருகிறார் என்பது புரிந்து விட்டதால், எனக்குத் தெரிந்த பதிலைத் தருகிறேன். இந்தப் பதிலில் யார் மனதாவது புண்படுமாயின், என் வருத்ததை முதலிலேயே பதிவு செய்து விடுகிறேன். யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். 

இந்த இளைஞர் இன்று இருக்கும் குழப்பத்தில்தான் நான் 80 களில் இருந்தேன். நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியர். நான் பள்ளியில் படிக்கும்போதே என்னை இந்தப் புகைப்படத் துறை இழுத்து விட்டது. காரைக்குடி அழகப்பா பொறியற் கல்லூரியில் B.E. சேர்ந்த பிறகு இந்தப் புகைப்படக் காய்ச்சல் ரொம்பவே கூடி விட்டது.

அப்போது என்னுடைய நண்பர்கள் குழுவில் மொத்தம் 7 பேர். அனைவருமே புகைப்படப் பிரியர்கள். அதில் என்னையும் சேர்த்து மூன்று பேர் புகைப்பட வெறியர்கள். அப்போது காரைக்குடியில் எங்களை கிண்டல் பண்ணாத மக்களே யாரும் கிடையாது. எங்கள் எல்லோருக்கும் நக்கலான பட்டப் பெயர்களும் உண்டு. என்னுடைய பெயர் பி.சி. ஸ்ரீராம். என்னுடைய நண்பன் குமாருக்குப் (பெயர் மாற்றம் செய்துள்ளேன்) பெயர் பாலு மகேந்திரா. இந்த பாலுமகேந்திரா, (ஒரிஜினல்) பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளனாக சேர்ந்து நாயகன், தேவர் மகன் போன்ற மிகப் பெரிய வெற்றிப் படங்களில் மிகக் கொஞ்சூண்டு சம்பளம் வாங்கி வேலை செய்து விட்டு , அதன் பிறகு இரண்டு , மூன்று படங்களில் அவன் தனியாக ஒளிப்பதிவாளனாக வேலை செய்து, தற்சமயம் பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் கஷ்டப்படுபவன். 

மூன்றாவது நண்பன் ரமேஷ். எங்கள் இருவரை விடவும் மிகப் பெரிய புகைப்படக் காதலன். அவனுக்குப் பட்டப் பெயர் அசோக் குமார். இருக்கும் படிப்பையெல்லாம் உதறி விட்டு கலைக்கு சேவை செய்கிறேன் என்று வெளியேறி , தற்சமயம் டி.வி.சீரியல்களில் வேலை செய்கிறான். 

காலையில் 7 மணிக்குச் சென்றால் இரவு 12 மணிக்குத்தான் திரும்புகிறேன். தினமும் அதே கேமரா செட்டிங், அதே அழுகை சீன், அதே டென்ஷனுடன் திரியும் டைரக்டர் என்று வாழ்க்கையே வெறுத்து வருகிறதுடா முரளி என்று சமீபத்தில் அவன் புலம்புகையில் நான் நிஜமாகவே கண்ணீர் விட்டேன். காரணம் அவன் கலை ஆர்வம் நானறிவேன்.

சரி, என் கதைக்கு வருகிறேன். நான் ஒரு மாதிரி பித்துப் பிடித்துத் திரிகிறேன் என்பதைப் பார்த்த என் அப்பா, கொஞ்சம் மெதுவாகவும் கொஞ்சம் கடுமையாகவும், புகைப்படத்துறையை ஒரு பொழுதுபோக்காக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதை மெயின் தொழிலாக எடுக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்லி, என்னை MS Mechanical Engineering படிக்க வைத்தார். இன்று வரை என்னை அதுதான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அதே படிப்பும் என் வேலையும்தான் இன்றுவரை என்னுடைய புகைப்பட ஆர்வத்தையும் சோறு போட்டு வளர்க்கிறது. 

கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து இப்போதுதான், நாம் ஏன் வேலையை விட்டு விட்டு புகைப்படத் துறையில் முழுவதுமாக இறங்கி இன்றைய இளைஞர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று தீவிரமாக யோசித்து வருகிறேன். நான் கொஞ்சம் டல் ஸ்டூடண்ட். அதனால்தான் 35 வருடங்கள் ஆகி விட்டன. அதற்காக எல்லோருக்கும் அவ்வளவு காலம் ஆகும் என்று அர்த்தம் இல்லை. 

சரி …விஷயத்திற்கு வருவோம். எடுத்தவுடனேயே எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும், ப்ராஃபிட் இருக்குமா இல்லையா என்று லாபக் கணக்கு இதில் போடுவது கடினம்.

இன்றும் எனக்குத் தெரிந்து புகைப்படக் கலையை சரியாகக் கற்றுக் கொள்ளாமல் ஸ்டுடியோ போட்டு ஒரு நாளைக்கு 10 பாஸ்போர்ட் ஃபோட்டோ வந்து விடாதா என்று ஏக்கத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள். சில பேர் தவறான லொக்கேஷனாலும் கஷ்டப்படுகிறார்கள்.

அதே போல், திருமண விழாவை புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள் ஏராளம். அதில் ஒரு சிலர் ஒரு நாளைக்கு 8000 முதல் 10,000 வரை வாங்குகிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து ஒரு சிலர் ஒரு விழாவிற்கு 5 லட்சம் வரை வாங்குகிறார்கள். ஏன் இவ்வளவு வித்தியாசம் ? 

இந்த 5 லட்சம் வாங்குகிறவர்கள், இந்த 8000 ரூபாய் வாங்குகிறவர்களை விட ஏகப்பட்ட விஷயங்களை மிகவும் வித்தியாசமாகப் பண்ணுகிறார்கள். ஏகப்பட்ட கூடுதல் சேவைகளை வழங்குகிறார்கள். எல்லாவாற்றிற்கும் மேலாக புதுமையான முறையில் மார்க்கெட்டிங் பண்ணுகிறார்கள்.

இப்போது நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் – Wedding Photography வருமானம் உள்ளதா இல்லையாவென்று. 

ஃபேஷன் ஃபோட்டோகிராஃபி…….காலையிலிருந்து இரவு வரை உழைத்து விட்டு வெறும் ஐயாயிரம் வாங்குபவர்களை நானறிவேன். அதே சமயம், ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சம் வாங்கும் ஒருவரையும் நானறிவேன். 

இருவரின் உழைப்பிலும் என்ன வித்தியாசம் ? ஒருவர் Hard Worker மற்றொருவர் Smart Worker . ஒருவர் புகைப்படக் கலைஞர். மற்றொருவர் புகைப்படக் கலை தெரிந்த ப்ரொஃஷனல் பிஸினஸ்மேன். அதுவும் ஒரு கலைதானே. இந்த இருவரில் யாராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

புகைப்படக் கலையை மற்றவர்களுக்கு சொல்லித்தருவதும் இதில் ஒரு பிரிவு. உதாரணத்திற்கு நான் அதைச் செய்யலாம் என்றிருக்கிறேன். ஒரு நல்ல நட்சத்திர ஹோட்டலின் ஏ.சி. ஹாலில் காலை டீ, காப்பி, மதிய உணவு (பஃபே) மாலை டீ, காப்பி அனைத்தும் வழங்கி அடிப்படை புகைப்பட விஷயங்களைப் பற்றிய ஒரு புத்தகமும் கொடுப்பதற்கு ஒரு நாளைக்கு 4000 வாங்கலாமா இல்லை 5000 வாங்கலாமா இல்லை இது அதிகமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், நம் இந்தியாவிலேயே எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் ஒரு நாளைக்கு (மொத்தமாக) 2 லட்சம் வரை வாங்குகிறார்கள் ப்ளஸ் அவர்கள் ஹோட்டலில் தங்கும் கட்டணம் ப்ளஸ் ஃபிளைட் கட்டணம் இத்தியாதி இத்தியாதி.  ஹால், சாப்பாடு எல்லாம் Organizers இன் தலைவலி, நான் சொல்லும் புகைப்படக் கலைஞர்கள் அதில் தலையிட மாட்டார்கள். 

எங்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம் ?

என்னுடைய நண்பர்கள் பெயர்களைச் சொன்னாலே இந்தியாவில் இந்தத் துறையில் இருக்கும் யாருக்கும் அவர்களைத் தெரியாமல் இருக்காது. 

ஆனால், பாலமுரளி என்று சொன்னால், யாரு இந்த கர்னாடக சங்கீதமெல்லாம் பாடுவாரே அவரா ? அவரு இன்னுமா இருக்காரு ? அவர் ஃபோட்டோவெல்லாம் எடுப்பாரா ? என்று கேட்கலாம். 

ஆம், இந்தத் துறையில் நீங்கள் எவ்வளவு பாப்புலர் என்பதும் மிக மிக முக்கியம். அதற்குத் தேவை வித்தியாசமான மார்க்கெட்டிங். 

இந்த “மாத்தி யோசி” மார்க்கெட்டிங் டெக்னிக் அனைத்துத் துறைக்கும் மிகவும் முக்கியம். வெற்றி பெற்ற யாரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள், அவர்கள் சொல்லும் சில ரகசியங்களில் “ கடின உழைப்பும், வித்தியாசமாக யோசித்தேன்” என்பதும் கண்டிப்பாக இருக்கும். 

என்னடா…நாம இவனைக் கேள்வி கேட்டால், இவன் பந்தை நம் பக்கமே திருப்பி விடுகிறானே என்று தோன்றுகிறதா ? 

சரி…உங்களுக்காக சுருக்கமாக சில டிப்ஸ் தருகிறேன்…

  • எந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், முதலில் அதை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். முழுமை என்றால், முழு ஆர்வத்துடனும் , ஆழத்துடனும் கற்றுக் கொள்ளுங்கள் (Interest, Involvement & Dedication) 
  • அப்படிக் கற்றுக் கொள்ளும் வரை, பணம் சம்பாதிப்பது பற்றி யோசிக்காதீர்கள். 
  • வித்தியாசமாக யோசியுங்கள். மற்றவர்கள் செய்யாத விஷயத்தை நீங்கள் செய்ய முயலுங்கள். Be different from others
  • கூடுதல் சேவைகளுக்கு ( Service) அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
  • கஸ்டமர்களின் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். கஸ்டமரிடம் போய் ‘புகைப்படக் கலையைப் பற்றி உனக்கு என்னய்யா தெரியும் “ என்ற ரேஞ்சில் பேசி விட வேண்டாம். 
  • எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் இலக்கை எட்டும் வரை சோர்வடைந்து விடாதீர்கள் ( Never Never Never Give up – வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது )

இந்த விஷயங்களையெல்லாம் பின் பற்றினீர்களென்றால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

 பிரியமுடன் 

பாலா.