இந்தக் கொடுமையான படத்தை எடுத்தது அம்போசலி நேஷனல் பார்க்கில்.

அந்த முறை எங்கள் சஃபாரி அனைத்தையும் முடித்து  விட்டு பார்க்கை விட்டு கிளம்பினோம். மெயின் Entrants ஐ விட்டு ஒரு அரை கிலோ மீட்டர்  வந்திருப்போம். நடு ரோட்டில் ஒரு குள்ள நரி , ஒரு சிறிய வெள்ளாடு ஒன்றைக் கொன்று  வயிற்றில் கடித்துக் கொண்டிருந்தது.

நான் உடனே காரை விட்டு இறங்கி என்னுடைய கேமராவில் 150 -500 mm  லென்ஸை மாட்டி நிதானமாக அந்தக் காட்சியை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். வெவ்வேறு செட்டிங்கில் ஒரு 20 படங்கள் எடுத்திருப்பேன். அதற்குள், அந்த நரி , அந்த வெள்ளாட்டின் குடலை மொத்தமாக வெளியே  உருவ ஆரம்பித்து விட்டது. அதையும் படம் பிடித்தேன். ஒரு கட்டத்தில் அந்தக் குடல் முழுவதுமாக வெளியே  வர சற்றே   திணறியதலால், நரி வெடுக் வெடுக்கென்று அந்தக் குடலை இழுத்தது. அதையும் படம் பிடித்தேன்.

அந்த சமயத்தில்தான்  நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல், அந்த ஆட்டுக்குட்டி தன் தலையைத் தூக்கி என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபடியும் தலையைச்  சாய்த்தது. அப்போதுதான் அந்த ஆடு இன்னும் உயிரோடு இருப்பதே எனக்குத் தெரிய வந்தது . ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.  அதிலும் அது என்னைப் பார்த்த பார்வை …” அடே கிராதகா ….உன்னுடைய பாழாய்ப் போன கேமராவை விட்டு விட்டு இந்த நரியை விரட்டி விட்டிருந்தாயானால் நான் உயிர் பிழைத்திருப்பேனேடா  , படு பாவி ” என்று சொல்வது போலவே இருந்தது.     

நான் கொஞ்சமும் தாமதிக்காமல் , கேமராவை  அங்கேயே விட்டு விட்டு, கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அந்த நரியை விரட்டி விட்டு , அந்த ஆட்டுக் குட்டியின் தலையைத் தூக்கி கொஞ்சம் தண்ணீர் புகட்டினேன். அது ஒரு இரண்டு மூன்று மிடறு குடித்து விட்டு தன் உயிரை விட்டது. என்னுடைய வாழ்க்கையில் கொடூரமான நாட்களில் அதுவும் ஒன்று. நான், என் மனைவி , என் மகள் மூவரும் அடுத்த ஒரு வாரத்திற்கு அதைப்  பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். யாருக்கும் தூக்கமே வரவில்லை. 

இது போன்ற சம்பவங்கள் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு எப்போதுமே ஒரு சவால். காட்டின் சுழற்சியைத் தடுக்காமல் விட்டு விடுவதா, இல்லை ஒரு உயிரைக் காப்பாற்றுவதா இல்லை இது போன்ற காட்சிகளைப் படம் பிடிப்பதா ?????? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே . 

வெ.பாலமுரளி