இந்தப் படத்தில் இருப்பவர்களின் இனத்திற்குப் பெயர் “ மசாய்”.

இவர்களைப் பற்றி முன்பு ஒரு முறை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வீரத்திற்கு பேர் போன மக்கள்.

இவர்களில் சில பேர் நிறைய படித்து பெரிய பெரிய வேலைகளில் (மினிஸ்டர் லெவலுக்கு) வந்த பிறகும் கூட, இந்த இனத்தில் பெரும்பாலானோர் இன்னும் கஷ்ட ஜீவனத்தில்தான் வாழ்க்கை ஓட்டுகின்றனர். 

மாடு மேய்ப்பது ஒன்றுதான் முக்கியமான தொழில். விசேஷ நாட்களில் மாடுகளின் கழுத்தி ஒரு அம்பை எய்து அதில் பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை நேரே குடிப்பது அவர்கள் இன வழக்கம். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிங்கத்தைக் கொன்று அதன் வாலை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே பெண் கொடுப்பார்கள். எனவே, நிறைய ஆண்களுக்கு 5, 6 மனைவிகள் சாதாரணம் ( பின்னே..உயிரைப் பணயம் வைத்து சிங்கத்தைக் கொன்று வந்த பிறகு, பெண்ணைத் தர மாட்டேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் ? ). 

பின்னர், அரசாங்கமும், வெளி நாடுகளில் உள்ள விலங்குகள் உயிரைக் காக்கும் சில தன்னார்வ நிறுவங்களும் இணைந்து இந்தப் பழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். 

பெண்கள் கழுத்து , கைகள் , தலை என்று எல்லா இடங்களிலும் வித விதமான பாசி நகைகளை அணிவது மரபு. 

அதே போல், ஆண்கள் அனைவரும், வானுக்கும் பூமிக்கும் குதிப்பது அவரக் இனத்தில் சிறப்பு. இவ்வளவு உயரத்திற்குக் குதிக்க முடியுமா என்று நம் எல்லோருக்கும் பயங்கர ஆச்சரியமாக இருக்கும்…

அவர்கள் அப்படிக் குதிக்கும் போது, ரப்பர் போல அலுங்காமல் குலுங்காமல் நெட்டுக் குத்தாக குதிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 

சமீபத்தில் அவ்ரகளின் ஒரு கிராமத்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 

அவர்களைப் பற்றியும், அவர்கள் வறுமையைப் பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் தொடர்ந்து எழுதுகிறேன்

பிரியமுடன் 

பாலா.