மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதலில் தங்கள் வாழ்வை இழந்த பரிதாபமான கதை.
நான் நைரோபி நேஷனல் பார்க்கில், 2011 மத்தியில் ஆரம்பித்து 2012 ஏப்ரல் வரை ஒரு குறிப்பிட்ட சிங்கத்தின் குடும்பத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தேன்.
வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை சென்று விடுவேன். காலையில் 6.30 மணிக்குச் சென்றால் மாலை 6 மணி வரையில் உள்ளேதான் இருப்பேன். ஒரு பிரெட் பாக்கெட்டும், குடிக்க ஒரு பாட்டில் தண்ணீரும் மட்டும் வைத்திருப்பேன். சில வாரங்கள் தவிர பெரும்பாலான நாட்களில் அவற்றைக் கண்டு பிடித்து விடுவேன். சிங்கமும் , புலியும் தங்கள் தங்கள் எல்லைகளை விட்டு வெளியில் செல்லாது. மற்ற குடும்பங்களையும் உள்ளே அண்ட விடாது ( Very Territorial ) .
அவற்றின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிந்து கொண்டேயிருந்தேன். நான் முதலில் என் வேலையைத் தொடங்கும் முன்னரே இந்தப் படத்தில் உள்ள பெண் சிங்கம் கருத் தரித்திருந்தது. அதையும் படம் பிடித்தேன். பின்னர் அது மூன்று குட்டிகளைப் போட்டு மூன்றும் சர்வைவ் ஆனது. சந்தோஷமாக இருந்தது. அவற்றின் படங்களும் இருக்கின்றன.
அந்தக் குட்டிகளை சுதந்திரமாக வெளியில் பார்ப்பது கடினம். மற்ற விலங்குகளால் ஆபத்து என்பதால் தாய்ச் சிங்கம் பொத்திப் பொத்தி வளர்க்கும். முதல் சில மாதங்களுக்கு (தந்தையான) ஆண் சிங்கத்திற்குக் கூட குட்டிகளைக் கண்ணில் காட்டாது.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
நான் இந்தப் புகைப்படத்தை ( 28.04.2012) எடுத்து மிகச் சரியாக ஒரு மாதத்தில், இந்த ஜோடியும், இன்னும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து பார்க்கை விட்டுத் தப்பித்து அருகில் உள்ள ஆத்தி ரிவர் என்னும் ஊருக்குச் சென்று சில பசு மாடுகளைக் கொன்று விட்டு, சமர்த்தாக பார்க்குக்குத் திரும்பி விட்டன. அந்த ஊரில் அதிகமாக வசிக்கும் மசாய் என்னும் பழங்குடி இனத்தவரைப் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.
வீரத்திற்குப் பேர் போன மக்கள். சில ஆண்டுகள் வரை, அவர்கள் இனத்தவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. ஒரு ஆண் மகன் (கல்யாண ) வயதுக்கு வந்து விட்டால், ஒரு ஆண் சிங்கத்தைக் கொன்று அதன் வாலை நறுக்கி வந்தால் மட்டுமே அவனுக்குப் பெண் கொடுப்பார்கள். மிகச் சமீப காலத்தில்தான் அது நிறுத்தப்பட்டது.
அவர்களது குலத் தொழில் மாடு மேய்ப்பது. அவர்கள் வீட்டுப் பெண்களைக் கூட சரியாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்கள் வீட்டு மாடுகளுக்கு ஒன்று என்றால் ருத்ர தாண்டவம் ஆடி விடுவார்கள். இன்றும் மாட்டு ரத்ததைப் பச்சையாகக் குடிப்பது அவர்களுக்கு கோக் குடிப்பது போல.
அப்படிப்பட்ட மக்களின் மக்களின் மாடுகளைக் கொன்றால், விட்டு விடுவார்களா ? உடனே , இந்த சிங்கங்களுக்கு வலை விரித்து விட்டனர்.
அது தெரியாத அந்த சிங்கங்கள் ஒரு வாரம் கழித்து அதே ஆத்தி ரிவருக்குச் செல்ல, மசாய் மக்கள் அவற்றைச் சுற்றி வளைத்து கொன்று விட்டனர். ஒரு வாரத்திற்குள் மொத்தம் 7 சிங்கங்கள் இறந்து விட்டன.
ஒவ்வொரு பார்க்கிலும் எல்லா சிங்கங்களுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. நான் செய்தித்தாள்களில் இதன் பெயர்களைப் படித்தவுடன், நெஞ்சே வெடித்து விடும் போலாகி விட்டது. அடுத்த ஒரு மாதத்திற்கு என்னுடைய நண்பர்கள் எல்லோரிடமும் இந்தப் படத்தைக் காண்பித்து புலம்புவது என்னுடைய வழக்கமாகப் போய் விட்டது.
அதற்குப் பிறகு கொஞ்ச நாட்களுக்கு நைரோபி நேஷனல் பார்க் போவதற்கே எனக்குப் பிடிக்காமல் இருந்தது.
அடுத்த ஒரு முறை போகும்போது அவற்றை வழக்கமாகப் பார்க்கும் ( King Fisher Area – Block 32 ) இடத்தில் போய்த் தேடிப் பார்த்தேன்- நம்ம தமிழ் சினிமாக்களில் வருவது போல திடீரென்று எங்கிருந்தாவது வந்து விடாதா என்ற நப்பாசையுடன்.
ம்ஹூம்……..அவை பறந்து போய் விட்டன.
அது சரி…இந்த விஷயத்தில் யாருடைய தவறு அதிகம் ? பார்க்கின் வேலிகளை சரியாக அடைத்து வைக்காத அதிகாரிகளா ? தங்கள் மாடுகளை சரியான பாதுகாப்பான இடத்தில் முறையாக அடைத்து வைக்காத மசாய்களா ? இல்லை, தங்கள் பசிக்காக வேலி தாண்டி சென்று மாடுகளை கொன்ற சிங்கங்களா ?
இது காலா காலத்துக்கும் எல்லா நாடுகளிலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் முடிவேயில்லாத மோதல்.
நாம்தான், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்துக் கொண்டிருக்கும் இடங்களை ஆக்கிரமித்து அவற்றை விரட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எபோதாவது உணர்வோமா ?
வெ. பாலமுரளி