இடம் : 

மசை மாரா , கென்யா ….

அன்று காலை சஃபாரிக்குக் கிளம்பும்போது மணி 5.30. ஒரு 6 மணி வாக்கில் மூன்று நான்கு கழுதைப் புலிகள் படத்தில் உள்ள, வேறு ஏதோ மிருகம் வேட்டையாடிய இந்த வில்டபீஸ்ட்டை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது தூரத்தில் இருந்தே தெரிந்தது. 

அந்த இடத்திற்குச் செல்ல நேரடிப் பாதை ( Car Track ) இல்லாதலால் சுற்றி வளைத்துச் செல்ல வேண்டியிருந்தது. 

அதனால், அங்கு என்ன நடக்கிறது என்று என்னால் பார்க்க முடிந்தது ஆனால், என்னுடைய கார் வேகமாக சென்று கொண்டிருந்ததால் புகைப்படம் ஒன்றும் எடுக்க முடியவில்லை. 

அப்போது இரண்டு ஆண் சிங்கங்கள் அங்கு வேகமாக ஓடி வந்தன. அவை வந்த வேகத்தினாலோ இல்லை தங்கள் வயிறு நிறைந்து விட்டதனாலோ, ஒரே ஒரு கழுதைப்புலியைத் தவிர மற்ற கழுதைப் புலிகள் அந்த இடத்தை விட்டு உடனே காலி பண்ணி விட்டன. 

இந்த ஒரே ஒரு கழுதைப் புலி மட்டும், அந்த இடத்தை விட்டு நகர மறுத்து திரும்பத் திரும்ப இரையை நோக்கி வந்து கொண்டேயிருந்தது. 

அந்தத் தொந்தரவைத் தாங்க முடியாமல் ஒரு ஆண்சிங்கம் பளார் என்று ஒரு அறை அறைய அந்த கழுதைப் புலி சுருண்டு விழுவதற்கும், நாங்கள் அந்த இடத்தைச் சென்றடைவதற்கும் சரியாக இருந்தது. 

அடிபட்ட கழுதைப் புலியால் நகல முடியவில்லை. கீழே விழுந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. 

சிங்கங்கள் இரண்டும் இரையை உண்பதில் கவனம் செலுத்தத் தொடங்கின. அதில் ஒரு சிங்கம் ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக் எடுத்துக் கொண்டு அந்த கழுதைப் புலியை நெருங்கி அதன் குரல் வளையை கடித்து நெருக்கிக் கொன்றது – அமெரிக்காவில் அந்த வெள்ளைக்கார காவலர் செய்தது போல. 

அது முற்றிலுமாக இறந்து விட்டதை உறுதிப் படுத்திய பிறகே அதன் பழைய இரையை நோக்கி நகர்ந்தது…

இது போன்று தினம் தினம் காட்டுக்குள் நாடகங்கள் ஏராளம்…

வெ.பாலமுரளி