நான் சமீபத்தில் எடுத்த Zoom session ஐ ஒரு கட்டுரையாக எழுதி இங்கு பதிவிடுகிறேன்.
கென்யா – கானுயிர் புகைப்படக் கலைஞர்களின் சொர்க்க பூமி என்றால் மிகையாகாது.
கென்யா என்றாலே , அங்குள்ள Wildlife மட்டும்தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால், அந்த நாட்டில் வருடம் முழுவதும் இருக்கும் குளு குளு க்ளைமேட், அழகான மலைகள், பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள், காப்பித் தோட்டங்கள், வெள்ளை மணல் நிறைந்த படு சுத்தமான பீச்கள் , மாசற்ற காற்று போன்ற விஷயங்கள் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை.
அப்பேற்பட்ட அற்புதமான ஒரு நாட்டில் நான் 25 வருடங்கள் வசித்திருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடிவதில்லை.
1994 – இல் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் போய் நான் இறங்கும்போது, எனக்கு Wildlife Photography பற்றி பெரிய பரிச்சயம் ஒன்றும் இருக்கவில்லை. அதுவரை Landscape Photography தான் எனக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. அங்கு இறங்கிய முதல் நாளே என்னுடைய மேலதிகாரி, எனக்குப் புகைப்படக் கலையில் ஆர்வம் இருப்பதை அறிந்து கென்யாவில் உள்ள காடுகள் பற்றி விவரித்து என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
கென்யாவில் நிறைய காடுகள் இருந்தாலும், மசை மாரா, அம்போசலி நேஷனல் பார்க், நக்குரு நேஷனல் பார்க், சம்புரு நேஷனல் பார்க், த்சாவோ நேஷனல் பார்க், நைரோபி நேஷனல் பார்க் என்ற 6 காடுகள்தான் ரொம்பவும் பிரபலம்.
அதேபோல், பறவைகள் எடுப்பதற்கு லேக் நைவாஷா, லேக் ஒலேடன், லேக் எலிமெண்டைட்டா , லேக் பரிங்கோ, லேக் புகொரியா, சம்புரு நேஷனல் பார்க் போன்ற இடங்கள் பிரபலம்.
கடந்த 25 வருடங்களில் மேற்கூறிய கென்யா காடுகளில் மட்டுமல்லாது, கென்யாவின் அண்டை நாடுகளான தான்சானியா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளான தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா நாடுகளில் உள்ள காடுகளிலும் எனக்கு வாய்த்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தத் தொடர்.
முதலில் கென்யா காடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிமுறைகளை கூறி விடுகிறேன்.
1. பிக்னிக் ஏரியா என்று வரையறுக்கப்பட்டிருக்கும் இடங்கள் தவிர மற்ற இடங்களில், காரை விட்டு இறங்குதல் கூடாது.
2. வன விலங்குகளுக்கு உண்பதற்கு எதுவும் தரக் கூடாது.
3. கார் சென்று வரும் ட்ராக் தடங்களைத் தவிர மற்ற இடங்களில் காரைச் செலுத்தக் கூடாது. அப்படிச் சென்றால் 1000 டாலர்கள் வரை அபராதம்.
4. வன விலங்குகள் உங்கள் வாகனங்களில் ஏறுவதை அனுமதிக்கக் கூடாது. அவை உங்கள் வாகனத்திற்கு வரும் முன்னரே , உங்கள் வாகனங்களை நகர்த்தி விட வேண்டும்.
5. வாகனத்திற்கு வெளியில் ட்ரைப்பாட் வைத்து டைமர் ஷாட்ஸ் எடுப்பதற்கு கண்டிப்பாக அனுமதியில்லை. கண்டுபிடித்தால், அதிகமான அபராதம் விதிப்பதோடு, உடனே பார்க்கை விட்டு வெளியேற்றியும் விடுவார்கள்.
6. கென்யாவில் எந்த பார்க்கிலும் ட்ரோன் பயன்படுத்த அனுமதி இல்லை.
7. சத்தமாக பேசுவதோ , இரைச்சலாக இசை கேட்பதோ கூடாது.
8. வாகனத்தின் மீது ஏறி படம் எடுப்பதற்கும் அனுமதியில்லை. ஆனால், கென்யாவில் உள்ள அனைத்து வாகனங்களிலும் , மேற்புறத்தை முற்றிலுமாக திறந்து, நீங்கள் வசதியாக நின்று கொண்டு படம் எடுக்கும் படி செய்திருப்பார்கள். அதே போல், லோ ஆங்கிள் ஷாட்ஸ் எடுக்க , வாகனத்தின் ஜன்னல்களை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
9. மூக்கைத் துளைப்பது போல் உள்ள வாசனைத் திரவியங்கள் உபயோகிக்க வேண்டாம். அது விலங்குகளை எரிச்சலூட்டக் கூடும்.
10. எந்தக் காரணத்தைக் கொண்டும் விலங்குகளோடு செல்ஃபி எடுக்க முயற்சிக்க வேண்டாம். பேராபத்தில் கொண்டு போய் விட்டு விடக் கூடும்.
சரி, கானுயிர் புகைப்படம் எடுக்கத் தேவையான உபகரணங்களைப் பார்ப்போம்.
நல்ல ஒரு டிஜிட்டல் கேமரா. முடிந்தால் இரண்டு கேமராக்கள். காரணம், அங்கு இருக்கும் தூசிக்கிடையில் அடிக்கடி லென்ஸ்களை மாற்றிக் கொண்டிருந்தால், உங்கள் சென்ஸாரில் தூசி ஒட்டிக் கொண்டு கேமரா பாழாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நான் Canon 1DX Mark II வும் Canon 5D Mark III யும் வைத்திருக்கிறேன். 1DX வனவிலங்குகள் எடுப்பதற்கு, 5D அங்குள்ள Landscape மற்றும் Wide Angle Shots எடுப்பதற்கு.
குறைந்தபட்சம் இரண்டு லென்ஸ்கள். ஒன்று கேமராவுடன் வரும் கிட் லென்ஸ் அல்லது வைட் ஆங்கிள் லென்ஸ். மற்றொன்று 300 மிமீ அல்லது அதற்கும் அதிகமாக ஃபோக்கல் லென்த் உள்ள Zoom Prime அல்லது Lens. நான் காட்டிற்குள் செல்லும்போது, என்னுடைய 16-35 மிமீ வைட் ஆங்கிள் லென்ஸ், 24-105 கிட் லென்ஸ், 100 – 400 Zoom லென்ஸ் மற்றும் 500 MM ப்ரைம் லென்ஸ் வைத்துக் கொள்வேன். இவை போக 1.4X டெலி கன்வர்ட்டர் ஒன்றும் எடுத்துக் கொள்வேன். ஆனால், கண்டிப்பாக இத்தனை உபகரணங்கள் கொண்டு போக வேண்டும் என்ற அவசியமில்லை. நான் அங்கு வசித்ததால், எனக்கு வெயிட் பிரச்சினை கிடையாது.
பேட்டரி. ஒவ்வொரு கேமராவுக்கும் இரண்டு பேட்டரி வைத்துக் கொள்வது நல்லது . நல்ல ஒரு காட்சி தென்படும்போது, பேட்டரி தீர்ந்து போய் விட்டால், வாழ்க்கையே வெறுத்து வரும்.
மெமரி கார்டு. இதில்தான் ஒரு சிறிய சூட்சுமம் இருக்கிறது. விலை குறைவான கார்டு வாங்கினால், அதன் இமேஜ் பதிவாகும் வேகம் குறைவானதாக இருக்கும். குறைந்த பட்சம் 90 MB/Sec ஸ்பீட் வாங்குவது அவசியம். இல்லாவிட்டால், நீங்கள் Burst Mode படம் எடுக்கும்போது உங்கள் கேமரா Hang ஆகி விடும். உங்கள் ஸ்க்ரீனில் Processing என்ற மேசேஜ் வந்து விடும். அப்படியென்றால் உங்கள் கார்டு, இமேஜை இன்னும் பதிவு பண்ணிக் கொண்டிருக்கிறது, அடுத்த ஷாட்டுக்கு அது இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். என்னுடைய கார்டுகள் அனைத்தும் 120 MB/Sec க்கும் அதிகமாகத்தான் இருக்கும். அதேபோல், 128 GB, 256 GB, 64 GB என்று நிறைய கார்டுகள் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால், ஒவ்வொரு நாள் இரவும் அன்று எடுத்த படங்களை லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து கொண்டு , மெமரி கார்டை ஃபார்மாட் செய்து மறு நாளுக்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் இரண்டும் செய்வேன்.
Bean Bag. இதுவும் மிகவும் முக்கியமான ஒன்று. அதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு பையில் காய்ந்த பட்டாணி அல்லது பூசணி விதை அல்லது அரிசி போன்ற ஏதேனும் ஒன்றை நிரப்பி அதன் மீது உங்கள் கேமராவை வைத்து எடுத்தீர்களேயானால், படம் எடுக்கும்போது வரும் சிறு சிறு அதிர்வுகள் தவிர்க்கப்பட்டு, படம் நீங்கள் நினைப்பது போல் அழகாக வரும். கென்யாவில் இருக்கும் பெரும்பாலான டூர் ஆப்பரேட்டர்கள் இதை வைத்திருப்பார்கள். ஆனால், Bean Bag வேண்டும் என்று முன்பே நீங்கள் சொல்லி விட வேண்டும்.
Monopod with Gimbal Head. Bird Walking செல்லும்போது இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
அதேபோல், Grad ND Filters ஒரு செட் வைத்துக் கொள்வது, சன் செட் & சன் ரைஸ் எடுப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
சரி. இப்போது என்னென்ன கேமரா செட்டிங்க்ஸில் நான் எடுப்பேன் என்று சொல்லி விடுகிறேன்.
அதற்கு முன்னர், ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் எடுக்கும் முறைதான் பெஸ்ட் என்று எப்போதும் நான் சொல்ல மாட்டேன். இது என்னுடைய ஸ்டைல். மற்ற கலைஞர்கள் வேறு மாதிரி எடுக்கலாம். அனைத்தையும் தெரிந்து கொண்டு , உங்களுக்கு என்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொள்வதே சிறந்த முறை.
முதலில் Image Resolution. நான் பொதுவாக RAW + JPEG என்று இரண்டு ஃபார்மாட்டிலும் எடுப்பேன். இப்படி எடுப்பதன் மூலம் மெமரி கார்டு அதிக இடத்தைப் பிடித்தாலும், RAW ஐ ப்ராசஸ் பண்ணுவதற்கும் JPEG ஐ quick review செய்வதற்கும் வைத்துக் கொண்டால், கம்ப்யூட்டரில் உங்கள் வேலை கொஞ்சம் சுலபமாகும்.
இரண்டாவது ISO. காட்டின் உள்ளே கிடைக்கும் வெளிச்சத்தைப் பொறுத்து ISO 200 அல்லது ISO 400 செட் பண்ணிக் கொள்வேன். ஆனால் தேவைப்படும்போது இதை கேமராவில் உள்ள அதிகபட்ச அளவிற்கும் உபயோகிக்கத் தயங்க மாட்டேன் – என்னுடைய சிறுத்தையும் குட்டியும் படத்தைப் போல. அதை எடுக்கும்போது அதிகாலை மணி 6. மிகவும் குறைந்த வெளிச்சமே இருந்தது. எனவே ISO 8000 இல் செட் பண்ணித்தான் அந்தப் படங்களை எடுத்தேன்.
Wildlife Photography எனப்படும் கானுயிர் புகைப்படங்கள் எடுக்கும்போது, நாம் எடுக்கப்போகும் படங்களின் தரம் நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அங்கு நாம் காணும் தருணங்கள் எதையும் தவற விடாமல் படம் பிடிப்பது ( Capturing the moments) . எனவே, தேவைப்படும்போது ISO வை அதிகரித்துக் கொள்வதில் தவறேதும் கிடையாது.
ஃபோகஸ் பாயிண்ட்ஸ். நான் பொதுவாக நடுவில் இருக்கும் ஒரே ஒரு பாயிண்ட்டை மட்டும்தான் பயன்படுத்துவேன். காரணம் அப்போதுதான், விலங்குகள் ஓடத் தொடங்கும்போது கேமரா ட்ராக் செய்ய எளிதாக இருக்கும். ஆனால், காடுகளில் உள்ள Landscape ஐ வைட் ஆங்கிள் லென்ஸில் எடுக்கும்போது Multi Points வைத்துக் கொள்வேன்.
ஆட்டோ ஃபோகஸ் சிஸ்டம். நின்ற நிலையில் உள்ள விலங்குகளை எடுக்கும்போது One Shot ம், ஓடும் விலங்குகளை எடுக்கும்போது AI Servo ( 3D Matrix) – வும் வைத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும்.
மீட்டரிங். நான் அதிகம் பயன்படுத்துவது Centre Weighted Average Metering அல்லது Spot Metering. மற்றபடி காடுகளில் Landscape எடுக்கும்போது Evaluate Metering தான் என் சாய்ஸ்.
மோட். நான் முதலில் சொன்னது போல், வனங்களில் நம்முடைய முதன்மையான குறிக்கோள் விலங்குகளின் அசைவுகளை மிக வேகமாக பதிவு செய்வது. காரணம் காடுகளில் எதுவுமே நமது கண்ட்ரோலில் கிடையாது. குறிப்பாக விலங்குகளின் அசைவுகள். கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் என்னென்னவோ நடந்து விடும்.
எனவே, நான் எப்போதும் கேமராவை Av – Mode இலும் Ev -1 இலும் வைத்திருப்பேன். நான் ஒரு காட்சியைக் கண்டதும், என்னுடைய முழுக் கவனமும், ஷார்ப்பாக ஃபோக்கஸ் செய்வதிலும், நேர்த்தியான காட்சியமைப்பு ( Composition / Framing) கொண்டு வருவதிலும்தான் இருக்கும். எனக்கு திருப்தியான படங்கள் வந்த பிறகும் அந்த விலங்கோ இல்லை அந்த பறவையோ நகராமல் அதே இடத்தில் இருக்குமேயானால், கொஞ்சமும் தாமதிக்காமல், கேமராவை Manual Mode – க்கு மாற்றி என்னுடைய விருப்பம் போல் வித விதமாக எடுத்துக் கொள்வேன். அதுபோல அந்தக் காட்சியமைப்பு மாறாமல் இருப்பதற்கு நிறைய அதிர்ஷ்டம் தேவை.
அதே போல், Aperture – க்கும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள மாட்டேன். க்ளோஸ் அப் என்றால் f4 அல்லது f5.6. வைட் ஆங்கிள் என்றால் f8 அல்லது f11.
பறவைகளை எடுக்கும்போதும், Slow Shutter Speed இல் எடுக்கும்போதும், Tv எனப்படும் Shutter Priority Mode இல் வைத்துக் கொள்வேன். ஸ்பீட் ?? அப்போதிருக்கும் வெளிச்சத்தைப் பொறுத்து வைத்துக் கொள்வேன். இதில் ஃபிக்ஸ்டாக எந்த நம்பரும் இல்லை.
இவை போக, புதிதாக இந்தத் துறையில் நுழையும் நண்பர்களுக்கு சில டிப்ஸ் தருகிறேன்.
1) எப்போதும் அலர்ட்டாக இருங்கள். நீங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஒரு அற்புதமான காட்சி நடந்து முடிந்து விடும்.
2) Winston Churchill சொன்னது போல Never Never Never Give Up. அதாவது நம்பிக்கையை இழக்காமல் இருப்பது. நீங்கள் காட்டை விட்டு வேளியேறும் கடைசி நொடியில் கூட ஒரு அற்புதமான ஷாட் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். எனக்கு அதுபோல் நிறைய தடவை நடந்திருக்கிறது. எனவே, அவசரப்பட்டு “Pack up” சொல்லி விடாதீர்கள்.
3) எதிர்பார்ப்பே ஏமாற்றத்திற்குக் காரணம். எனவே, இன்று புலியையோ, சிறுத்தையையோ அல்லது சிங்கத்தையோ கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்றெல்லாம் நிறைய எதிர்பார்த்து காட்டுக்குச் செல்லாதீர்கள். எதிர்பாராமல் கிடைப்பதுதான் வனங்களில் கிடைக்கும் அனுபவங்கள். சினிமா படங்களில் வரும் வசனங்கள் போல், ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால், கிடைப்பதை எடுங்கள். நல்ல லைட்டிங் கண்டிஷனில் என்ன கிடைத்தாலும் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். எடுத்த எல்லாவற்றையும் பார்த்து சந்தோஷப்படக் கற்றுக் கொண்டால், கானுயிர் போல ஒரு அற்புதமான விஷயம் கிடையாது என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.
4) விலங்குகள் ஏதேனும் ஆக்ஷனில் இருந்தால் மட்டுமே Burst Mode ஐ உபயோகியுங்கள். நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் Burst Mode இல் எடுத்தால் உங்கள் மெமரி கார்டு விரைவில் முடிந்து விடுவதோடு, அதை கம்ப்யூட்டரில் Sort Out பண்ணும்போது மண்டை காய்ந்து விடும்.
5) காட்டுக்குள் இருக்கும்போது, எடுத்த படங்களை Preview Screen – இல் அடிக்கடி பார்ப்பதைத் தவிருங்கள். அதனால் மூன்று பிரச்சினைகள் வரக் கூடும்.
a) நீங்கள் Preview Screen இல் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் , வெளியில் நல்ல ஒரு காட்சி நடந்து முடிந்து உவிடக் கூடும்.
b) ஒருவேளை, நீங்கள் எடுத்த படம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி வந்திருக்காவிட்டால் உங்கள் Mood Upset ஆகி மீதி உள்ளே இருக்கும் நேரத்தில் நீங்கள் எடுக்கும் படங்கள் சொதப்பல் ஆகக் கூடும்.
c) மூன்றாவது, வண்டி நகர்ந்து கொண்டேயிருப்பதால், கை தவறி All Delete பட்டனை அழுத்தி விட வாய்ப்பிருக்கிறது – என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு ஆனதைப் போல. அப்படி நடந்தால், அதை விட பெரிய இழப்பு உங்களுக்கு வாழ்க்கையில் நடக்காது.
6) உங்கள் கேமராவில் Back Button Focus Option இருந்தால், அதை உபயோகப் படுத்த ஆரம்பியுங்கள். கானகத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்
7) முடிந்த வரைக்கும் , லோ ஆங்கிளில் எடுக்க முயற்சியுங்கள். குறிப்பாக, விலங்குகள் அருகில் இருக்கும்போது. அதற்கு பெஸ்ட் பொசிஷன் கார் ஜன்னலில் வைத்து எடுப்பது.
8) இறுதியாக, ஒவ்வொரு நாளும் கேமரா மற்றும் மற்ற உபகரணங்களை தினமும் சுத்தப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால், அன்றன்று எடுத்த படங்களை அன்றன்றைக்கே லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து கொண்டு, அதையும் உடனுக்குடன் Back Up எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மேற்கூறிய விஷயங்கள் போதும். நீங்களும் Wildlife Photographer தான்.
இத்துடன் சில படங்களையும் , அதன் செட்டிங்ஸையும் கொடுத்திருக்கிறேன்.
அடுத்தடுத்த பதிவுகளில் வனங்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களையும், அப்போது எடுத்த படங்களையும் வெளியிடுகிறேன்.
பிரியமுடன்,
பாலா.