வேர்களைத் தேடி – 14 தமிழி(யி)ன் மூலம்

இன்றைக்கு தொல்லியலில் நிறைய ஆய்வாளர்களின் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் இரண்டு கேள்விகள்:

  1. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி என்ன ? 
  2. சிந்துவெளி மக்களுக்கும் தமிழர்களுக்குமான (திராவிடர்களுக்கல்ல ) தொடர்பு என்ன ?

இதில் விட்டுப்போன இன்னொரு கேள்வி உள்ளது. அதற்கான பதிலை கண்டுபிடித்து விட்டால் முதல் இரண்டு வினாக்களுக்கு விடை கிடைத்து விடும். 

அந்தக் கேள்வி “ தமிழியின் அதாவது தமிழ் எழுத்துருவின் மூலம் என்ன ?” 

இதற்கு பதில் தேடும் ஒரு சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை. 

நண்பர்கள் பாலாபாரதி, தென்கொங்கு சதாசிவம், தம்பிகள் உதயகுமார் (பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்), கீரனூர் நாராயணமூர்த்தி  புண்ணியத்தால் நான் இதுவரை 50க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களையும் , பாறைக் கீறல்களையும் பார்த்து விட்டேன். 

அதில் ஒவ்வொரு இடமுமே அற்புதம் என்றாலும், குறியீடுகள் நிறைந்திருக்கும் சில இடங்கள் அதி அற்புதம் மட்டுமல்ல மிகப்பெரிய ஆய்வுகள் நடத்த வேண்டிய ரகசிய சுரங்கங்கள். 

காரணம் அதில் உள்ள நிறைய குறியீடுகள் சிந்து வெளிக் குறியீடுகளுடன் ஒத்துப் போகின்றன. 

அவற்றில் பெரும்பாலான இடங்கள் பெருங்கற்காலத்துடன் தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன. அதாவது 3000 முதல் 4000 வருடங்கள் பழைமையானவை. அவற்றில் ஓரிரு ஓவியங்களைத் தவிர ஏனைய அனைத்துமே வெண்சாந்து ஓவியங்கள்.

சிந்துவெளி குறியீடுகளுடன் நிறைய குறியீடுகள் ஒத்துப் போனாலும், அவற்றில் சில குறியீடுகளை மட்டும் கீழே பட்டியிலிடுகிறேன். 

  1. சிந்துவெளி முத்திரையில் நிறைய இடங்களில் மனித உருவம் போலவும், ஒரு மனிதன் கையில் கேடயம் இருப்பது போலவும் சில குறியீடுகள் உள்ளது. அதைப்போன்ற உருவத்தை ஏராளமான பாறை ஓவியங்களில் காண முடிகிறது. அவற்றில் பல,  நிஜ மனிதர்களையும் அவர்களின் அன்றாட வாழ்வியலை அல்லது போர் சம்பவங்களை நினைவுபடுத்துவதாய் அமைந்திருந்தாலும் கூட , சில இடங்களில் அவை ஏதோ சொல்ல வருவதற்காக அமைந்த எழுத்துக்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு : வருச நாடு , சமணர்மலை, நடுமுதலைக்குளம், கொம்மேடு, ராஜபாளையம் மற்றும் கொங்கர் புளியங்குளத்தில் உள்ள ஓவியங்கள். அவற்றின் படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.  
  • சிந்துவெளியில் உள்ள இன்னொரு மிக முக்கியமான குறியீடு , ஒரு செங்குத்துக் கோட்டில் மேலே U போல ஒரு வளைவான கோடும் அதற்குக் கீழே ஒன்றிற்கும் மேற்பட்ட குறுக்குக் கோடுகளும் உள்ள ஒரு குறியீடும். (ஒரு அடையாளத்திற்கு இதை மின்னல் வடிவ குறியீடு என்றே அழைப்போம்). இது கண்டிப்பாக ஒரு எழுத்தைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். 

விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை என்னும் இடத்தில் ஒரு வாக்கியம் போல அமைந்துள்ள ஒரு செஞ்சாந்து பாறை ஓவியத்தில் முதல் எழுத்தாக இந்தக் குறியீடுதான் உள்ளது. 

அது தவிர, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கோட்டப் பள்ளி என்னும் இடத்தில் கன்னாபின்னாவென்று வெண்சாந்து நிறத்தில் குறியீடுகளாக ஒரு பாறை முழுவதும் வரையப்பட்டுள்ளன. அங்கே, இந்த மின்னல் வடிவ குறியீடு நிறைய இடங்களில் உள்ளன. இதில் ஒவ்வொரு இடத்திலும் குறுக்கே உள்ள கோடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக உள்ளன. அனேகமாக அவை குறில், நெடில் போன்ற வெவ்வேறு ஒலிகளைக் குறிப்பதாக இருக்க வேண்டும். விரிவான ஆய்வுகள் வேண்டும்

  • சிந்து வெளியில் உள்ள உடுக்கை போன்ற ஒரு குறியீடு. இதையும் நிறைய பாறை ஓவியங்களில் காண முடிகிறது. குறிப்பாக கீழ்வாலையிலும், கருங்காலக்குடியிலும், பெரிய கோட்டப் பள்ளியிலும். 

மின்னல் குறியீடு போலவே பெரிய கோட்டப் பள்ளியில் இந்த உடுக்கை குறியீட்டையும் வெவ்வேறு விதமாக வரைந்து வைத்துள்ளனர். ஒரு இடத்தில் உடுக்கையின் மேலே ஒரு கோடு, இன்னொரு இடத்தில் நடுவில் ஒரு கோடு என்று வித்தியாசப்படுத்தியுள்ளனர். இதுவும் எழுத்தின் அல்லது சொல்லின் ஒலியை வேறுபடுத்தி காட்டக் கூடியதாக இருக்கலாம். ஆம். “லாம்” தான். விரிவான ஆய்வுகள் தேவை. 

  • சிந்துவெளி முத்திரைகளில் உள்ள செங்குத்து ஒற்றைக் கோடுகள். சிந்துவெளி முத்திரைகள் அனைத்தும் அல்லது பெரும்பாலானவை வணிகம் தொடர்பானவை என்பது நிறைய அறிஞர்களின் ஒருமித்த கருத்து. அந்த வகையில் பார்த்தால் இந்தச் செங்குத்துக் கோடுகள் கண்டிப்பாக எண்ணிக்கையை குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். 

அதை ஒத்த இங்குள்ள குறியீடுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு தொண்டூரில் உள்ள தமிழிக் கல்வெட்டில் உள்ள மூன்று கோடுகள் அங்குள்ள மூன்று அறிவர் படுக்கைகளைக் குறிப்பதாக உள்ளன. 

அதேபோல திருப்பரங்குன்றத்தில் நான் கண்டுபிடித்த தமிழிக் கல்வெட்டில் உள்ள ஐந்து கோடுகள் அங்குள்ள ஐந்து அறிவர் படுக்கைகளைக் குறிப்பதாக உள்ளன. 

இவை தவிர இந்த செங்குத்துக் கோடுகளை நிறைய வெண்சாந்து பாறை ஓவியங்களிலும் காண முடிகிறது

  • சிந்துவெளியில் உள்ள அடுத்த முக்கியமான குறியீடு முக்கொம்பு குறியீடு. இதை இலங்கை ஆனைக் கோட்டை முத்திரையிலும், நடுமுதலைக் குளம் போன்ற நிறைய வெண்சாந்து பாறை ஓவியங்களிலும் காண முடிகிறது. 
  • சிந்துவெளிக் குறியீட்டில் அடுத்தது ஆங்கில எழுத்து U வில் இரண்டு உச்சியிலும் உள்ள முக்கொம்புக் குறியீடு.இதையும் புத்தூர்மலை ஓவியம் போன்று சில இடங்களில் காண முடிகிறது. அதில் சிறிது மாற்றம் செய்து அதே U வின் இரு உச்சியிலும் பக்கவாட்டில் இரு சிறு கோடுகள் உள்ள சிந்து வெளிக் குறியீட்டையும் இங்கு காண முடிகிறது. 
  • செங்குத்து நிலையில் உள்ள மீன் சின்னம். இதையும் ஒரு பாறை ஓவியமாகவோ, பாறைக் கீறலாகவோ இங்கு பார்த்திருக்கிறேன். எங்கு என்று நினைவில்லை.
  • சிந்து வெளியில் உள்ள சீப்பு வடிவ சின்னம். இதை திருமயத்தில் பாறைக் கீறலாகவும், சில இடங்களில் வெண்சாந்து ஓவியங்களாகவும் காண முடிகிறது. 
  • இவை தவிர ஒரு வட்டத்தில் இருக்கும் பெருக்கல் சின்னம், ஒரு சதுரத்தை நான்காகப் பிரிக்கும் இடம் தொடர்பான சின்னம் ஆங்கில எழுத்து D யின் குறுக்கே வரும் கோடு, தமிழி எழுத்தில் வரும் “த”, ஏணி, கூட்டல் குறி (தமிழியின் “க”) என்று ஏராளமான சின்னங்களை சிந்துவெளியிலும், நம் தமிழ் நாட்டிலும் ஒருங்கே காண முடிகிறது. 

அப்புறமென்ன ….இவ்வளவு ஆதாரங்கள் போதாதா  இரண்டு இடங்களிலும் இருந்த மக்கள் ஒரே இனம்தான் என்று நிரூபிக்க என்று உங்களுக்குத் தோணலாம். 

ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. 

  1. மேலே உள்ள ஆதாரங்கள் எவையும் இந்தக் குறியீடுகள்தான் தமிழியின் மூலம் என்றோ தமிழர்களின் மூலம் என்றோ நிரூபிக்க போதுமானதாக இல்லை – த, க, ர போன்ற எழுத்துக்களைத் தவிர.
  • சங்க இலக்கியத்தில் உள்ள புறநானூறு பாடல் எண்: 201 இல் கபிலர்,  49 தலைமுறைக்கு முன்பு துவாரகாவிலிருந்து புலம் பெயர்ந்த வேளிர்களைப் பற்றியும், ஒரு வடபால் முனிவனைப் பற்றியும் பாடுகிறார். அந்த வடபால் அகத்தியராக 

இருக்க”லாம்” ( இந்தப் பாடலை வைத்துத்தான் அகத்தியர் என்னும் ஆரிய முனிவர் வட நாட்டிலிருந்து இங்கு வந்து நமக்கு தமிழை சொல்லிக் கொடுத்தார் என்று நமக்குப் பாடம் எடுத்தார்கள். அதை வைத்து புராணக் கதைகளும் , திரைப்படங்களும் வெளி வந்தன).  

கபிலரின் காலம் கி.மு.200 என்று என்று எடுத்துக் கொண்டால் , அன்றைய கால கட்டத்தில் ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள் என்று கொண்டால், அவர் சொல்லும் 49 தலைமுறை என்பது நம்மை கி.மு.1500 க்கு இட்டுச் செல்கிறது. மிகச் சரியாக நம் பகுதியில் பெருங்கற்காலப் பண்பாடு தொடங்கிய காலம். அதாவது தோராயமாக இங்குள்ள வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்ட காலம்.

அகத்தியர் மலையில் அதாவது பொதிகை மலையில் அதாவது இன்றுள்ள குற்றாலம் பகுதியில் உள்ள சன்னாசிப் பொடவு (அ) பரதேசிப் பொடவு பகுதி என்பது அகத்தியர் வசித்த அல்லது துறவு கொண்ட பகுதியாக இருக்க”லாம்”. அவர்தான் அல்லது அவரும் நம் எழுத்துருவிற்கு பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் என்பது நிறைய பேரின் வாதம். அது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கத் தோணும் விதமாக அங்குள்ள ஒரு குகைத் தளத்தில் சில குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. (அங்கு நேரில் சென்று புகைப்படம் எடுத்து அது பற்றி இன்னும் விரிவாக எழுகிறேன்). 

ஆனால், அதில் “ல” என்ற எழுத்தைத் தவிர வேறெந்த குறியீடும் மேலே குறிப்பிடப்பட்ட பாறை ஓவிய குறியீடுகள் போலவோ, சிந்து வெளி குறியீடுகள் போலவோ இல்லை. அப்படியென்றால் இந்தக் குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன ? கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் துவாரகையிலிருந்து (அதாவது இன்றைய குஜராத் பகுதியிலிருந்து)  அவர் வந்ததாகக் கருதப்படும் சிந்துவெளியிலும், இன்றைய தமிழ் நாட்டிலும் மேலே குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் உபயோகம் நன்றாகவே வந்து விட்டன. அப்படி இருக்கும்போது அவர் ஏன் சம்பந்தமேயில்லாமல் இந்தவகை குறியீடுகளைப் பயன்படுத்தினார் என்பது புரியாத ஒரு புதிர். நம் அரசாங்கம் வெளியிட்டுள்ள அதன் படத்தை இங்கு பதிவிடுகிறேன்.  உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

  • கடைசியாக ஒரு பெரிய ட்விஸ்ட். ஒரு முறை இணையத்தை நோண்டிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக சௌதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாறை ஓவியத்தைக் காண நேர்ந்தது. அதில் பெரிய கோட்டப்பள்ளியிலும், கீழ்வாலையிலும் உள்ள மின்னல் குறியீடும், நம் தமிழி எழுத்தில் உள்ள “ த” குறியீடும் ஒரே இடத்தில் இருந்தன. அதை நண்பர் பாலாபாரதியிடம் சொன்னபோது அவர் ஆச்சரியப்பட்டு ஒரு பழங்கால சீன நாணயத்தின் படத்தை அனுப்பி வைத்தார். ஆச்சரியமாக அதிலும் அதே மின்னல் குறியீடு. எங்கோ பொறி தட்டுகிறதோ ?

இதில் என்ன ஆச்சரியம், நம் தமிழன்தான் சுமேரியா சௌதி, ஈரான், ஈராக்,   எத்தியோப்பியா, சீனா, அமெரிக்கா என்று எல்லா நாட்டிற்கும் சென்று நமது மொழியையும், நம் எழுத்துருவையும் பரப்பினான் என்று ஆதாரங்கள் இல்லாமல் உருட்டப் போவதில்லை. 

ஆனால், நாம் அனைவரும் தமிழையும், தமிழ் வரலாறையும், தமிழ் எழுத்துருவையும், குமரிக் கண்டத்தையும் இன்றுள்ள தமிழ் நிலப்பரப்பை மையமாக வைத்தே தேடி நம் பொன்னான நேரத்தை வீணாக்குகிறோம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. 

பெருங்கற்காலப் பண்பாடு தொடங்கிய வட ஆப்பிரிக்காவிலும், மத்திய தரைக் கடலிலும் நம் கவனத்தைச் செலுத்தினால் தமிழின் மூலத்தை கண்டுபிடிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன.

இங்குள்ள அனைத்துப் படங்களையும் அவற்றில் குறித்துள்ள அம்புக் குறியிட்ட இடங்களையும் உற்று நோக்குங்கள். நான் சொல்வது தெளிவாகப் புரியும். 

வெ.பாலமுரளி 

நன்றிகள் :

நண்பர் பாலா பாரதி, நண்பர் தென்கொங்கு சதாசிவம் தம்பிகள் உதயக்குமார் மற்றும் நாராயணமூர்த்தி

உயர்திரு . தங்கவேலு அவர்கள் எழுதிய தமிழரைத் தேடி

உயர்திரு. பிரபாகரன் எழுதிய சுமேரியமா குமரிக் கண்டமா

உயர்திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிந்துவெளியின் திராவிட அடித்தளம்