வேட்டையாடு விளையாடு – 1
இரண்டாம் நாள் காலை.
வழக்கம்போல் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாலை 5.30 மணிக்குக் கிளம்பினோம்.
நம்ம ஹரியின் சிங்கம் படம் போல, அன்றைய தினம் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
“உன்னுடைய ப்ளான் என்ன?” என்றான் ஜாக். என்னுடைய ப்ளானை விடு. உன்னுடைய ப்ளான் என்ன என்றேன். இரட்டை சகோதரர்களை ( Bora Mbili ) பின்தொடர்வோமா என்றான்.
ஷூகர்கேன் சாப்பிட ஃபீஸ் எதற்கு என எண்ணிக் கொண்டு டபுள் ஓகே என்றேன்.
இந்த இடத்தில் “ம்பீலி போரா” வைப் பற்றி சொல்லி விடுகிறேன். கென்ய மொழியான ஸ்வஹிலியில் “ம்பீலி” என்றால் இரண்டு. “போரா” என்றால் சகோதரர்கள். இரட்டைச் சகோதரர்கள்.
அது சரி…யாரிந்த இரட்டைச் சகோதரர்கள் ?
கொஞ்சூண்டு ரிவர்ஸ் கியரில் பயணிப்போம். சில வருடங்களுக்கு முன் மசை மாராவில் வாழ்ந்த வெற்றிகரமான தாய்தான் “மலாய்க்கா” என்னும் சிவிங்கிப் புலி ( சீட்டா ).
ஆமா…அது என்ன “வெற்றிகரமான” தாய் ?
பொதுவாக மாரா போன்ற காடுகளில் சிவிங்கிப் புலி (சீட்டா) தன்னுடைய குட்டிகளை ஈன்று, வளர்ப்பது ஒன்றும் சாதாரணமான காரியமில்லை. கழுதைப் புலி, சிங்கம், சிறுத்தை, காட்டு நாய், காட்டெருமைகள் என்று அவைகளை எந்த நேரமும் ஆபத்து சூழ்ந்திருக்கும். பெரும்பாலான சமயங்களில் சீட்டாவின் குட்டிகள் இவற்றில் ஏதாவது ஒன்றிடம் தங்கள் உயிரைப் பறி கொடுத்து விடுவது வழக்கம்.
அப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில்தான் மலாய்க்கா 5 குட்டிகளை ஈன்று, அவற்றை பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் வளர்த்தாள். ஐந்து பேரும் ஆம்பள பசங்க. அந்த ஐந்து பேரும் ஒற்றுமையாக சுற்றுவதும், ஒற்றுமையாக, தங்கள் அம்மாவுடன் வேட்டைக்குச் செல்வதும், பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.
இந்த மலாய்க்காதான், அங்கு வரும் வாகனங்களின் மீது ஏறி அடிக்கடி நோட்டம் விட்டு அனைவருக்கும் சூப்பராய் போஸ் கொடுக்கும். 2014 – இல் மாலாய்க்கா எங்கள் வாகனத்தில் ஏறிய போது எடுத்த படத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்.
வயோதிகம் காரணமாக 2018 ஆ இல்லை 2019 ஆ என ஞாபகமில்லை, மலாய்க்கா இறந்து விட்டது.
வழக்கம்போல், நம்ம மனுஷங்க மாதிரியே அம்மா இறந்ததும், அண்ணன் தம்பிகளிடம் நீயா, நானான்னு ஈகோ பிரச்சினை. அது அடி தடி வரைக்கும் போய் இரண்டு சகோதரர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இறந்தேபோய் விட்டன – Cold blooded murder.
இதற்கிடையில் இன்னொரு சீட்டா ஒரு சிங்கக் குடும்பத்திடம் வகையாக மாட்டிக் கொண்டும், அதுவும் உயிரை விட, இப்போது மீதமிருப்பது இந்த “போரா ம்பீலி”தான்.
இது வரைக்கும் இந்த இரண்டு பேரும் ஒற்றுமையாய் திரிகிறார்கள் – “ மரக்கட்டையைத் தொடவும்” ( அதாங்க “ Touch Wood”).
பொதுவாக சீட்டாக்கள் தாம்சன் கஸல், காட்டு முயல், காட்டுப் பன்றி, வில்ட பீஸ்ட்டின் குட்டிகள், வரிக்குதிரையின் குட்டிகள் என்று, தங்களை விட பலம் குறைந்த விலங்குகளைத்தான் வேட்டையாடும். ஆனால், இந்த போரா ம்பிலி சமீப காலமாக வரிக்குதிரை, வில்ட பீஸ்ட் என்று கொஞ்சம் பெரிய விலங்குகளை வேட்டையாடத் தொடங்கி விட்டன என்றான் ஜாக். அதிர்ஷ்டம் இருந்தால் அவற்றின் வேட்டையைப் பார்க்கலாம் என்றான்.
அவன் அதைச் சொல்லும் தொணியிலேயே, அவை இன்று வேட்டையாடப் போவதை ஜாக்குக்கு வாட்சப் செய்தி அனுப்பி விட்டது புரிந்தது. நான் உற்சாகமாக என்னைத் தயார் பண்ணிக் கொண்டேன்.
நாங்கள் கிளம்பி கொஞ்ச தூரத்திலேயே ம்பீலி போராவைப் பார்த்து விட்டோம். நாங்கள் போவதற்குள்ளாகவே அவை தூரத்தில் வரிக்குதிரைகளும், வில்டபீஸ்ட் என்ற ஒரு வகை மான் கூட்டமும் இணைந்து புல்லை மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து, மெதுவாக பதுங்கிப் பதுங்கி ஸ்டாக்கிங் ( Stalking ) பண்ண ஆரம்பித்து விட்டன.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருத்தலுக்குப் பிறகு, அவை எழுந்து துரத்த ஆரம்பிக்க வரிக்குதிரைகளும், வில்ட பீஸ்ட்டுகளும் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தன.
சீட்டாக்களில் ஒன்று வரிக்குதிரைகளையும், மற்றொன்று வில்டபீஸ்ட்டுகளையும் வெவ்வேறு திசைகளில் துரத்த ஆரம்பித்தன.
நான் கேமராவின் வ்யூ ஃபைண்டரை விட்டு என் கண்களை அகற்றாமலிருந்ததால், என்னால் இரண்டாவது சீட்டாவைப் பார்க்க முடியவில்லை. முதல் சீட்டாவை மட்டும் குறி வைத்து பர்ஸ்ட் மோடில் வைத்து தட தடவென்று க்ளிக்கத் தொடங்கினேன். அந்த ஒன்றுதான் வரிக்குதிரைகளைத் துரத்திக் கொண்டிருந்தது.
அந்த வரிக் குதிரைகள் சீட்டாவிடமிருந்து தப்பித்து விட்டதை என் கேமரா வழியாக பார்க்க முடிந்தபோது, அந்த இரண்டாவதைத் தேடத் தொடங்குவதற்கும், அது ஒரு வில்டபீஸ்ட்டை பிடிப்பதற்கும் சரியாக இருந்தது. செம டைமிங். சில வினாடிகள் அந்த இரண்டாவது சீட்டா மட்டுமே அந்த வில்ட பீஸ்ட்டை வீழ்த்த படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் , வரிக்குதிரைகளைத் தவற விட்ட அந்த முதலாவது சீட்டாவும் வந்து சேர்ந்து கொள்ள அந்த வில்ட பீஸ்ட் வகையாக மாட்டிக் கொண்டது.
இது போன்ற வேட்டைகளில், வேட்டையாடும் மிருகம் குறி வைப்பது அந்த இரையின் குரல் வளையைத்தான். அதைக் கவ்வி விட்டதென்றால் அந்த மிருகம் தப்பிப்பதற்கு வாய்ப்பில்லை என்று பொருள். அதைக் கவ்வி அதன் மூச்சைத் தடுத்து விடுதல் அவற்றின் குறிக்கோள்.
இரையாகப் போகும் மிருகங்களுக்கும் இது புரியும். எனவே, தங்கள் குரல்வளையை காப்பாற்றிக் கொள்ள அவை படாத பாடும். இங்கும் அது நடந்தது.
இரண்டு சீட்டாக்களும் அந்த வில்ட பீச்ட்டைப் பிடித்து விட்டாலும், அதன் குரல்வளை அவ்வளவு எளிதாக மாட்டிக் கொள்ளவில்லை.
வில்ட பீஸ்ட்டும் அந்த இரண்டு சீட்டாக்களையும் சுமந்து கொண்டு கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் சுற்றிச் சுற்றி தன்னை விடுவிக்க
பயங்கரமாகப் போராடியது. ஒரு கட்டத்தில் தன்னுடைய கொம்புகள் ஒரு சீட்டாவின் வயிற்றில் கூட பாய இருந்தது. ஆனால், அதற்கு தன்னுடைய பலம் தெரியாதலால் அதை வலுவாக சீட்டாவின் வயிற்றில் செலுத்த இயலவில்லை.
இது எல்லாவற்றையும் என்னுடைய கேமராவில் பார்த்துக் கொண்டே, தொடர்ந்து நிதானமாக ஸ்லோ பர்ஸ்ட் மோடில் போட்டு எடுத்துக் கொண்டேயிருந்தேன்.
அந்தப் போராட்டத்தில் ஒரு சீட்டா, வில்ட பீஸ்ட்டின் குரல் வளையைப் பிடித்து விட்டது. எங்கே அது தப்பித்து விடுமோ என்ற பயத்தில் தன்னுடைய நான்கு கால்களையும் அந்தரத்தில் தூக்கி, தன் உடலின் மொத்த பலத்தையும் வில்ட பீஸ்ட்டின் குரல் வளையில் செலுத்தத் தொடங்கியது. பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருந்தது. அந்த வில்ட பீஸ்ட்டுக்கு “லைஃப் ஆர் டெத்” சூழ்நிலை. தன் குரல்வளையின் கண்ட்ரோலை இழந்தபோதும் விடாமல், அந்த இரண்டு சீட்டாக்களையும் தூக்கி கரகரவென்று சுற்ற ஆரம்பித்தது.
ஆனால், ஒரு கட்டத்தில் அது தன் நிலை இழந்து கீழே விழுந்து விட்டது. இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா என்று அந்த இரண்டாவது சீட்டாவும் குரல்வளையின் மீதமுள்ள பகுதியை கவ்வ, அந்த வேட்டை ஒரு முடிவுக்கு வந்தது.
சீட்டாக்கள் என்னதான் மிக வேகமாக ஓடக் கூடிய விலங்கு என்றாலும் (130 km/Hr) , அவற்றின் வேட்டைகளின் வெற்றி விகிதம் என்னவோ 20 சதவிகிதத்திற்கும் கீழேதான்.
நான் அவற்றின் வெற்றிகளைப் பார்த்ததை விட அவற்றின் தோல்வியடைந்த வேட்டைகளைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.
அதுவும் இந்த முறை ரொம்பவே பயங்கரம்.
இதைப் பார்த்த மறு நாளே இரண்டு சிங்கங்கள் ஒரு காட்டுப் பன்றியை வேட்டையாடியது இன்னும் பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.















அதை அடுத்து எழுதுகிறேன்
வெ.பாலமுரளி.